search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா போல் போராடி இரட்டை இலை சின்னத்தை பெறுவோம் - டி.டி.வி. தினகரன்
    X

    ஜெயலலிதா போல் போராடி இரட்டை இலை சின்னத்தை பெறுவோம் - டி.டி.வி. தினகரன்

    தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக தான் முடக்கப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதா போல் போராடி சின்னத்தை மீட்போம் எனவும் அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக தான் முடக்கப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதா போல் போராடி சின்னத்தை மீட்போம் எனவும் அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

    ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டுள்ளது.
    ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற இரு அணிகளுக்கும் இடையே பலத்த போட்டி ஏற்பட்டது. அதன்பின்னர் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே தர வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மனு கொடுத்தனர். இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், அக்கட்சியின் அதிகாரப்பூர்வமான சின்னமான இரட்டை இலையை முடக்கி வைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது குறித்து சர்ச்சை நீடிப்பதால் தற்போது சின்னத்தை யாருக்கு என்ற முடிவை எடுக்கமுடியவில்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியிருப்பதாவது:-

    இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது தற்காலிகமானது தான். ஜெயலலிதா போல் போராடி இரட்டை இலை சின்னத்தை பெறுவோம். தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு எங்களுக்கு ஓர் அனுபவம் தான். இவ்விவகாரத்தில் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெறுவோம்.

    இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதனால் வேறு யாருக்கும் வெற்றி வாய்ப்பு இல்லை. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதில் யாருடைய பின்புலம் இருந்தாலும் அது குறித்து கவலை இல்லை.

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவதில் இருந்து எந்த மாற்றமும் இல்லை.நாளை காலை 11 மணிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்ய இருக்கிறேன். மாற்று சின்னத்தில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×