search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலாத்கார சம்பவம் எதிரொலி: பல்கலைக்கழக மாணவ- மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடு
    X

    பலாத்கார சம்பவம் எதிரொலி: பல்கலைக்கழக மாணவ- மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடு

    பாலியல் பலாத்கார சம்பவம் எதிரொலி காரணமாக புதுவை பல்கலைக்கழக மாணவ- மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்த மேற்கு வங்க மாணவி தனது ஆண் நண்பருடன் இரவில் பொம்மையார் பாளையம் கடற்கரைக்கு சென்ற போது மர்ம நபர்கள் அவரிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது சம்பந்தமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்கலைக்கழக உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், விடுதி வார்டன்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில், பல்கலைக்கழக மாணவ- மாணவிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி விடுதிகளில் தங்கி இருக்கும் மாணவ- மாணவிகள் இரவு நேரங்களில் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது. அப்படி செல்வதாக இருந்தால் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.

    புராஜெக்ட் மற்றும் கல்வி பணிகள் சம்பந்தமாக வெளியே செல்வதாக இருந்தால் திரும்பி வரும்போது, அவர்கள் பயணம் செய்ததற்கான பஸ் டிக்கெட் அல்லது அதற்கான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிப்பது, வாடகைக்கு இருசக்கர வாகனங்களை எடுத்து அதன் மூலம் மாணவ - மாணவிகள் வெளியே சுற்றுவதை கட்டுப்படுத்துவது என்று முடிவு எடுத்தனர்.

    அப்போது மாணவ- மாணவிகள் சிலர் பல்கலைக்கழக கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு தேவையான போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. பல்கலைக்கழக வளாகத்தில் போதிய விளக்கு வசதி இல்லை. விடுதியில் சரியான சாப்பாடு வசதி இல்லை.

    இதுபோன்ற பல காரணங்களால் மாணவர்கள் வெளியே செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, உரிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.
    Next Story
    ×