search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.
    X
    கோவில்பட்டியில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.

    தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்

    மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    கோவில்பட்டி:

    நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தர்மபுரி உள்பட தமிழகம் முழுவதும் 300 பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளும், 25 முழு இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகளும் மற்றும் கையால் தயாரிக்கப்படும் தீப்பெட்டி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

    தமிழகத்தில் தரத்துடன் தயாரிக்கப்படும் தீப்பெட்டி பண்டல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் வட மாநிலங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் தீப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. தீப்பெட்டி தொழிலை நம்பி சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

    சமீபகாலமாக தீப்பெட்டி தயாரிப்புக்கான மூலப் பொருட்களான குச்சி, மெழுகு, பேப்பர், அட்டை போன்றவைகளின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. மத்திய-மாநில அரசுகளும் தீப்பெட்டி தொழிலுக்கு போதிய சலுகைகள் வழங்காததால் உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கிடையே வட மாநிலங்களில் தமிழக தீப்பெட்டிகளின் விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால் உற்பத்தியாளர்கள் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர்.

    கடந்த காலங்களில் 600 தீப்பெட்டிகள் கொண்ட ஒரு பண்டல் வட மாநிலங்களில் ரூ.260 முதல் 280 வரை விலை போனது. ஆனால் கடந்த சில வாரமாக இதன் விலை ரூ.240 ஆக குறைந்து விட்டது. இதனால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

    எனவே மூலப்பொருட்களின் விலையை குறைக்க வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகள் சலுகைகள் வழங்க கோரியும், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தொழிற்சாலைகளை ஒரு வாரம் மூட முடிவு செய்தனர். அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகள் நேற்று முதல் வருகிற 26-ந்தேதி வரை மூடப்படுகின்றன.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கழுகுமலை, எட்டையாபுரம், கயத்தாறு, நெல்லை மாவட்டத்தில் திருவேங்கடம், சங்கரன் கோவில், கடையநல்லூர் ஆகிய இடங்களில் இயங்கி வந்த அனைத்து தீப்பெட்டி தொழிற்சாலைகளும் நேற்று முதல் மூடப்பட்டன. இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பில் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட தீப்பெட்டிகள் குடோன்களில் தேக்கம் அடைந்துள்ளன.

    இன்று 2-வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்கிறது. ஒரு வாரம் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்படுவதால் இத்தொழிலை நம்பி உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர். இந்த தொழிலை சார்ந்துள்ள அச்சகங்கள், குச்சி தயாரிப்பு கம்பெனிகள், மூலப்பொருட்கள் விற்பனையகங்களும் முடங்கியுள்ளன.

    வேலை நிறுத்தம் தொடர்பாக நே‌ஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சேதுரத்தினம் கூறியதாவது:-

    தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான அட்டை, பேப்பர், குச்சி, மெழுகு போன்ற மூலப்பொருட்களின் கடும் விலையேற்றத்தால் தீப்பெட்டியின் அடக்கச்செலவு அதிகரித்துள்ளது. இந் நிலையில், வடமாநில மார்க்கெட்டிலும் கட்டுப்படியான விற்பனை விலை கிடைக்காததால் சுமார் 300 கோடி ரூபாய் வரை மதிப்பிலான தீப்பெட்டி பண்டல்கள் தேக்கமடைந்துள்ளது.

    மேலும் சிறு தொழில் பட்டியலில் தீப்பெட்டி தொழிலை வைக்க வேண்டும், கலால் வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக தீப்பெட்டி கம்பெனிகள் போராட்டத்தில் குதித்து உள்ளது.

    ஏப்ரல் 1-ந்தேதி முதல் 600 தீப்பெட்டி கொண்ட பண்டல் ஒன்றுக்கு தற்போது விற்பனை செய்யும் விலையிலிருந்து குறைந்தபட்சம் ரூ. 25 உயர்த்தவும் உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×