search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோர்ட்டு அவமதிப்பு வழக்கு:  கமி‌ஷனர் ஜார்ஜ் இன்றும் ஆஜர் ஆகாதது ஏன்? - ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி
    X

    கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: கமி‌ஷனர் ஜார்ஜ் இன்றும் ஆஜர் ஆகாதது ஏன்? - ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி

    கோர்ட்டு அவமதிப்பு வழக்கில், போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் இன்றும் நேரில் ஆஜர் ஆகாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய ஐகோர்ட்டு நீதிபதி, வருகிற 27-ந் தேதி அவர் நேரில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டார்.
    சென்னை:

    சென்னை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் அண்ணாமலை சொத்து விவகாரம் குறித்து வழக்கு தொடர்ந்த பொன்.தங்கவேலு என்பவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதம் சென்னை போலீஸ் கமி‌ஷனருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த உத்தரவின்படி பாதுகாப்பு வழங்காததால், போலீஸ் கமி‌ஷனருக்கு எதிராக பொன்.தங்கவேலு கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கில், போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார். ஆனால், ஜார்ஜ் ஆஜராகவில்லை. இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்து, போலீஸ் கமி‌ஷனர் எப்போது ஆஜராவார்? என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளிக்க இழுத்தடித்த அரசு தரப்பு வக்கீல்கள், இறுதியில் போலீஸ் கமி‌ஷனர் வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) நேரில் ஆஜராவார் என்று பதிலளித்தனர்.

    இதற்கிடையில், மற்றொரு கோர்ட்டு அவமதிப்பு வழக்கில், போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் இன்று காலையில் நேரில் ஆஜராகவேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி வைத்தியநாதன் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார்.

    இந்த வழக்கில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்குகளில், எத்தனை வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது? எத்தனை வழக்குகள் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட நிலையிலேயே உள்ளது? என்று அறிக்கையை ஐகோர்ட்டு தலைமை பதிவாளரிடம் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை போலீஸ் கமி‌ஷனர் தாக்கல் செய்யாததால், அவரை நேரில் ஆஜராக நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டிருந்தார்.

    இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் ஆஜராகவில்லை. அவர் சார்பில் ஆஜரான அரசு வக்கீல் கோவிந்தராஜ், ஐகோர்ட்டின் உத்தரவின்படி, மத்திய குற்றப்பிரிவு வழக்குகளின் விவரங்கள் கொண்ட அறிக்கை ஐகோர்ட்டில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு விட்டது என்றார்.

    அப்போது நீதிபதி, ‘போலீஸ் கமி‌ஷனரை நேரில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டும் அவர் ஏன் இன்று ஆஜராகவில்லை? அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்பட்டது? கடந்த வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்த போது, அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. அதனால் அவரை நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

    ஆனால், ஐகோர்ட்டு பதிவுத்துறை வெளியிட்டுள்ள வழக்கு விசாரணை விவர பட்டியலில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது? இது எப்படி நடந்தது? ஐகோர்ட்டு பதிவுத்துறை யாருடைய அனுமதியின் பெயரில் அவ்வாறு குறிப்பிட்டது?’ என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

    அதற்கு அரசு வக்கீல் கோவிந்தராஜ், ‘இந்த ஐகோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை ஓட்டேரி போலீசார், போலீஸ் கமி‌ஷனரின் கவனத்துக்கு கொண்டு வரவில்லை. அதனால், காலதாமதம் ஆனது. ஐகோர்ட்டின் உத்தரவை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணம் போலீஸ் கமி‌ஷனரிடம் இல்லை. உத்தரவின் விவரம் தெரிந்தவுடன், கடந்த வெள்ளிக்கிழமை காலையில், ஐகோர்ட்டு பதிவுத்துறையில் அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது’ என்றார்.

    ‘ஓட்டேரி போலீசார் தகவல் தெரிவிக்கவில்லை என்றால், அந்த அதிகாரி மீது உரிய நடவடிக்கைகயை எடுக்க வேண்டும். அதற்காக கோர்ட்டில் ஆஜராகாமல் இருப்பதா?’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    அதற்கு அரசு வக்கீல், ‘ஓட்டேரி போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது’ என்றார்.

    அதற்கு நீதிபதி, ‘தற்போது தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை, பிப்ரவரி 2-ந் தேதி தயாரிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது’ என்றார். ‘இந்த அறிக்கை சென்னை முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை. தற்போது, அந்த அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை இந்த ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்று அரசு வக்கீல் கூறினார்.

    இதையடுத்து நீதிபதி, ‘இந்த வழக்கில் போலீஸ் கமி‌ஷனர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டும், அவர் ஆஜராகவில்லை. எனவே, இந்த வழக்கு விசாரணையின் போது வருகிற 27-ந் தேதி நேரில் ஆஜராகவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.

    Next Story
    ×