search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்ஸ்பெக்டரை போனில் பேசி மிரட்டிய கைதி
    X

    இன்ஸ்பெக்டரை போனில் பேசி மிரட்டிய கைதி

    காட்பாடியில் ரூ.25 லட்சம் வழிப்பறி வழக்கில் மனைவியிடம் விசாரித்த இன்ஸ்பெக்டரை போனில் மிரட்டிய கைதி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    காட்பாடி ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் கண்ணன். வியாபாரி. வசூலான பணம் ரூ.25 லட்சத்தை எடுத்துக் கொண்டு கடந்த 6-ந் தேதி கண்ணன் விருதம்பட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரை தாக்கி ரூ.25 லட்சத்தை வழிப்பறி செய்து தப்பினர்.

    இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுசம்பந்தமாக, திருவலத்தை சேர்ந்த ரம்யா (24), சுதா (21), மணிகண்டன் (20) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.6 லட்சம், 20 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சாரங்கபாணி (36), கண்ணன்(32), கோட்டீஸ்வரன்(24), விஜய்(23), கார்த்திக் (23) ஆகியோர் கோர்ட்டில் சரணடைந்தனர்.

    இந்த நிலையில் வழக்கில் துப்பு துலக்கிய இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசாரை ரம்யாவின் கணவர் ஜெயிலில் இருந்தே மிரட்டியுள்ளார். தற்பாது இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

    விருதம்பட்டில் வியாபாரி கண்ணனிடம் ரூ.25 லட்சம் வழிப்பறி செய்த வழக்கு சம்பந்தமாக செல்போன் டவரில் பதிவான எண்கள் மூலம் குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். அப்போது அங்கு பதிவாகியிருந்த செல்போன் நம்பர் திருவலத்தில் உள்ள ரம்யா என்ற பெண்ணுக்கு சொந்தமானது என தெரியவந்தது.

    இதையடுத்து திருவலத்தில் உள்ள ரம்யாவின் வீட்டுக்கு இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் சென்றனர். அங்கு ரம்யா வீட்டில் இருந்தார். போலீசாரை கண்டதும் பதற்றம் அடைந்தார். அவரிடம் வழிப்பறி குறித்து விசாரணை நடத்தினர்.

    அந்த நேரத்தில் ரம்யாவின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் ஸ்பீக்கரில் போட்டு பேசும்படி போலீசார் கூறினர். அதன்படி ஸ்பீக்கரில் போட்டபடி போனில் ரம்யா ஹலோ என்றார்.

    மறுமுனையில் அவரது கணவர் சரவணன் பேசினார். உன் மீது அதிக அன்பு வைத்திருக்கிறேன். உன்னை நிறைய காதலிக்கிறேன். உன் நினைவால் வாழ்கிறேன் என காதல் வசனங்கள் திட்டமிட்டபடி வழிப்பறியை கச்சிதமாக முடித்து விட்டீர்கள். உன்னை போலீசார் நெருங்குவார்கள் ஆனால் உன் மீது அவர்கள் வழக்கு பதிவு செய்ய மாட்டார்கள் மீறி வழக்கு பதிவு செய்தால் நான் என்ன செய்வேன் என்பது அவர்களுக்கு தெரியும் என சரவணன் கூறியுள்ளார்.

    இதனை கேட்ட போலீசார் ரம்யாவிடம் போனை பறித்து உன் மனைவியை கைது செய்ய போகிறோம் என தெரிவித்தனர். அப்போது சரவணன் போலீசாரை மிரட்டி போனை துண்டித்துள்ளார்.

    சரவணன் எங்கே? அவன் எங்கிருந்து பேசுகிறான் என ரம்யாவிடம் போலீசார் கேட்டனர்.

    அவர் கடத்தல் வழக்கில் கைதாகி வேலூர் ஜெயிலில் இருக்கிறார். இப்போது ஜெயிலில் இருந்து தான் பேசுகிறார் என அவர் கூறினார்.

    இதனைக் கேட்டதும் போலீசார் திருக்கிட்டனர். ஜெயிலில் இருந்து கைதி போனில் சகஜமாக பேசியது எப்படி? என்பது குறித்து உயர் அதிகாரிகள் மற்றும் ஜெயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் போலீசார் மற்றும் சிறைதுறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் கொள்ளை வழக்கு தொடர்பாக சரணடைந்த சாரங்கபாணி, கண்ணன், கோட்டீஸ்வரன், விஜய், கார்த்திக் ஆகியோரிடம் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×