search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.1800 கோடியில் புதுவை நகரம் ‘ஸ்மார்ட் சிட்டி’ ஆகிறது: நாராயணசாமி தகவல்
    X

    ரூ.1800 கோடியில் புதுவை நகரம் ‘ஸ்மார்ட் சிட்டி’ ஆகிறது: நாராயணசாமி தகவல்

    மத்திய அரசு, பிரான்சு அரசு உதவியுடன் ரூ.1800 கோடியில் புதுவை நகரம் ‘ஸ்மார்ட் சிட்டி’ ஆகிறது என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    எனது தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை நடந்தது. கூட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

    கடந்த ஆட்சியில் சேதாராப்பட்டு அருகில் ஸ்மார்ட் சிட்டி உருவாக்க முடிவு செய்திருந்தனர். இதற்காக 2 முறை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டும் தேர்வு செய்யப்படவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் புதுவையை அழகிய, தரமான நகரமாக மாற்ற முடிவு செய்தோம். இதற்கு பிரான்ஸ் அரசும் உதவிகள் செய்ய முன்வந்தது. தற்போது ரூ.1800 கோடியில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    இதில் மத்திய அரசு, மாநில அரசு, பிரெஞ்சு அரசு ஆகியவை தலா ரூ.500 கோடியும், தனியார் ரூ.300 கோடியும் பங்களிக்க முடிவு செய்துள்ளனர். பிரான்ஸ் அரசை சேர்ந்த 16 நிறுவனங்கள் இதற்கான பணிகளை செய்யவுள்ளனர். மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்திடம் இம்மாத இறுதியில் இதற்கான ஒப்புதல் பெறப்படும். ஏப்ரல் முதல் வாரத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் தொடங்கும்.


    புதுவை, காரைக்கால், ஏனாம் பிராந்தியத்தில் இஸ்லாமியர்களுக்கு 2 சதவீத இடஒதுக்கீடு வழங்கியிருந்தோம். மாகி பகுதிக்கு மட்டும் வழங்காமல் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மாகி பகுதிக்கும் 2 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மருத்துவம், பொறியியல் அரசு சலுகையில் படிக்க முடிவு செய்துள்ளோம்.

    சட்டசபையில் வரும் 30, 31-ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம். இது கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சபாநாயகருடன் கலந்து பேசி தேதி இறுதி செய்யப்படும்.

    கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரியில் 3 நோயாளிகள் இறந்த சம்பவம் கேள்விப்பட்டவுடன் அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அதோடு இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    இதுதொடர்பாக விசாரணை நடத்த ஜிப்மர் டாக்டர், அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர், பொதுப்பணித்துறை அதிகாரி, மின்துறை அதிகாரி கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவினர் 2 நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின் அறிக்கை தாக்கல் செய்வார்கள். அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் பாரபட்சம் பார்க்கமாட்டோம். சுகாதாரத்துறையில் சில குறைபாடுகள் இருப்பதாக புகார் வந்தது. இந்த குறைகளை தற்போது நீக்கியுள்ளோம்.

    இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர் சுட்டு கொல்லப்பட்டார். இதை கண்டித்து காரைக்கால் பகுதி மீனவர்கள் 2 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். சப்-கலெக்டர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளனர். புதுவை ரோடியர் மில், கே.வி.கே., பாப்ஸ்கோ ஆகியவற்றில் விதிமுறைகள் மீறி அதிக அளவு ஆட்களை பணியில் அமர்த்தியுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து கழகத்தில் புதிய பஸ்கள் வாங்கி இயக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×