search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி சர்ச்சை: சசிகலா 7-ந்தேதி பதில் அளிக்கிறார்
    X

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி சர்ச்சை: சசிகலா 7-ந்தேதி பதில் அளிக்கிறார்

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா 7-ந்தேதி பதில் அளிப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக கடந்த டிசம்பர் 29-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அவரது தோழி சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

    பிறகு அவர் 31-ந்தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்திற்கு வந்து பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றார். இது தொடர்பாக தேர்தல் கமி‌ஷனுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த மாதம் 5-ந்தேதி முதல்- அமைச்சர் பதவியில் இருந்து விலகிய ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க.வில் தனி அணி உருவானது. அந்த அணியினர் சசிகலாவை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.

    ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள 12 எம்.பி.க்கள் டெல்லி சென்று தலைமை தேர்தல் அலுவலகத்தில் சசிகலாவுக்கு எதிராக மனு கொடுத்தனர். சசிகலா அ.தி.மு.க. சட்ட விதிகளின்படி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படவில்லை என்றும் எனவே அவரது நியமனம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் அவரால் செய்யப்பட்ட புதிய நியமனங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தங்கள் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

    இதையடுத்து சசிகலாவுக்கு தலைமை தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது. பிப்ரவரி மாதம் 2, 15 மற்றும் 17-ந்தேதிகளில் மூன்று தடவை தேர்தல் கமி‌ஷன் சசிகலாவுக்கு கடிதம் அனுப்பி இருந்தது.

    பிப்ரவரி 28-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் சசிகலாவுக்கு தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று பெங்களூர் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருப்பதால் சசிகலா பதில் அனுப்பவில்லை.

    அவருக்கு பதில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள டி.டி.வி.தினகரன் பதில் அனுப்பினார். பிப்ரவரி 20 மற்றும் 28-ந்தேதிகளில் அவர் 5 மனுக்களில் பதில் அளித்து இருந்தார். அதில் அவர், “அ.தி.மு.க.வின் சட்டவிதிகளின் படியே சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்” என்று விளக்கம் அளித்து இருந்தார்.

    டி.டி.வி.தினகரனின் இந்த பதிலை தலைமை தேர்தல் கமி‌ஷன் ஏற்க மறுத்து விட்டது. இது தொடர்பாக பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கு தேர்தல் கமி‌ஷன் கடிதம் அனுப்பி உள்ளது.

    அந்த கடிதத்தில், “டி.டி.வி. தினகரன் உங்கள் கட்சியின் எந்த பதவியிலும் இல்லை. எனவே அவரது பதிலை ஏற்க இயலாது. பதில் கடிதங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ பதவிகளில் இருப்பவர்கள் மட்டுமே அனுப்ப வேண்டும். அதில் உங்கள் கையெழுத்து இடம் பெற்றிருக்க வேண்டும். அல்லது உங்களால் நியமனம் செய்யப்பட்டுள்ள ஒருவர் மூலம் பதில் அனுப்பலாம்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    மார்ச் 10-ந்தேதிக்குள் உரிய பதிலை அனுப்ப வேண்டும் என்றும் சசிகலாவுக்கு தேர்தல் கமி‌ஷன் அறிவுறுத்தி உள்ளது. இந்த தகவல் நேற்று வெளியானதும் அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் விவகாரத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கைகளை சசிகலா தரப்பு அ.தி. மு.க.வினர் மேற்கொண்டுள்ளனர்.

    முதல் கட்டமாக தேர்தல் கமி‌ஷனுக்கு எத்தகைய பதில் அளிப்பது என்று டி.டி.வி. தினகரன் ஆலோசனை நடத்தினார். அதன்படி தினகரனை அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்திருப்பது பற்றி அதிகாரப்பூர்வமாக தேர்தல் கமி‌ஷனிடம் கடிதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


    இதற்கிடையே தேர்தல் கமி‌ஷன் எழுப்பி உள்ள கேள்விகளுக்கு சசிகலா மூலமாக அவர் கையெழுத்துடன் பதில் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. சசிகலா அ.தி.மு.க. சட்ட விதிகளின்படி தான் பொதுச்செயலாளராக தேர்வு ஆனார் என்பதை உறுதிப்படுத்துவதற்கான அம்சங்கள் அந்த ஆவணங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.

    இந்த ஆவணங்களில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற முறையில் சசிகலா கையெழுத்திட்டதும் அது தலைமை தேர்தல் கமி‌ஷன் வசம் ஒப்படைக்கப்படும். இன்றும், நாளையும் (சனி, ஞாயிறு) அரசு விடுமுறை என்பதால் பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை யாரும் சந்தித்து பேச இயலாது.

    எனவே திங்கட்கிழமை சசிகலாவை சந்தித்து பதில் ஆவணங்களில் கையெழுத்து பெற அ.தி.மு.க. வக்கீல்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். அந்த பதில் 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தலைமை தேர்தல் கமி‌ஷனிடம் ஒப்படைக்கப்படும் என்று அ.தி.மு.க. வக்கீல்களில் ஒருவரான செந்தில் தெரிவித்துள்ளார்.

    7-ந்தேதி சசிகலா பதில் தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் அந்த பதிலை தலைமை தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகள் உடனடியாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்வார்கள் என்று தெரிகிறது. சசிகலா பொதுச்செயலாளராக சட்ட விதிகளின்படிதான் தேர்வானாரா? என்பதை பரிசீலனை செய்வார்கள்.

    இதையடுத்து உடனடியாக தேர்தல் கமி‌ஷன் தனது முடிவை வெளியிட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அடுத்த வாரம் இறுதியில் சசிகலா மீதான பொதுச்செயலாளர் பதவி சர்ச்சை முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே அ.தி.மு.க. சட்ட விதிகளில் தலைமை தேர்தல் கமி‌ஷன் தலையிட முடியுமா? என்ற கேள்வி குறியும் எழுந்துள்ளது. இதில் சட்ட நிபுணர்கள் இடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.

    தேர்தல் கமி‌ஷன் தனது முடிவை வெளியிடும் போதுதான் இதுபற்றிய சர்ச்சைகளுக்கு தீர்வு தெரிய வரும். தேர்தல் கமி‌ஷன் முடிவை ஏற்காத பட்சத்தில் அடுத்தக்கட்டமாக இந்த விவகாரம் கோர்ட்டுக்கு செல்லவும் வாய்ப்பு உள்ளது.
    Next Story
    ×