search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாடு முழுவதும் இன்று 10 லட்சம் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்
    X

    நாடு முழுவதும் இன்று 10 லட்சம் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்

    வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 10 லட்சம் பேர் நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பணம் டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல், காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து வங்கி சேவைகளும் அடியோடு பாதித்தன.

    சென்னை:

    வங்கி தனியார்மயம், வராக்கடன் வசூலில் சுணக்கம், 2 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 10 லட்சம் பேர் நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் உள்ளிட்ட 9 சங்கங்கள் சார்பில் நடக்கும் இந்த ஸ்டிரைக்கில் தமிழகத்தில் 65 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேசிய மயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகள், பழைய தனியார் வங்கிகளை சார்ந்த ஊழியர்கள் இதில் கலந்து கொண்டதால் வங்கி சேவை கடுமையாக பாதித்தன.

    வங்கிகளில் பணம் டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல், காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து வங்கி சேவைகளும் அடியோடு பாதித்தன.

    சென்னையில் பெரும்பாலான வங்கிகள் ஊழியர்கள் இல்லாமல் மூடப்பட்டன. ஒரு சில வங்கிகளில் உயர் அதிகாரிகள் மட்டும் பணிக்கு வந்திருந்தனர். கிளை மேலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் வங்கி பணிகள் முற்றிலும் முடங்கின.


    சென்னையில் இயங்கும் காசோலை பரிவர்த்தனை நிலையங்களில் சுமார் 7 ஆயிரம் கோடி மதிப்புள்ள 10 லட்சம் காசோலைகள் தேங்கியுள்ளன. இன்று மாதத்தின் கடைசி நாள் என்பதால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக பணம் எடுக்க முடியாமல் பல நிறுவனங்கள் தடுமாறின.

    வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்கின் காரணமாக ஏ.டி.எம். மையங்களில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. அவசர பணத்தேவை உள்ளவர்கள் வரிசையில் நின்று பணம் எடுத்து சென்றனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் காரணமாக மூடப்பட்ட பல ஏ.டி.எம். மையங்கள் இன்னும் செயல் பாட்டிற்கு முழுமையாக வரவில்லை.

    வங்கிகளில் பணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதால் கூட்டம் குறைந்ததே தவிர இன்னும் அனைத்து ஏ.டி.எம்.களும் செயல்பாட்டிற்கு வரவில்லை. இதனால் பொது மக்கள் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் தலைமையில் நடந்த போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து அவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

    சி.எச்.வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    110 லட்சம் கோடி சேமிப்பு புழக்கத்தில் இருக்கும் வங்கிகளை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. அவற்றை மேலும் அரசு கண்காணிப்புடன் நடத்த வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை நியமிப்பதில் நிர்வாகம் ஆர்வம்காட்டுகிறது. அதனை கைவிட வேண்டும்.


    பெருகிவரும் வராக் கடனை வசூலிக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. சாதாரண மக்களின் சேமிப்பு மூலமாக பெரும் டெபா சிட்டை பெரும் முதலாளிகளுக்கு கடனாக அளிக்கின்றனர்.

    ஆனால் இந்த பெரும் முதலாளிகளிடம் இருந்து கடன்கள் திரும்ப பெறாமல் ஏமாற்றப்படுகின்றன. எனவே துரித நடவடிக்கை எடுத்து வராக்கடன் தொகையினை வசூலிக்க வேண்டும் என்று அனைத்து வங்கி தொழிற்சங்கங்களும் வலியுறுத்துகின்றன. ஆனால் அதற்கு மாறாக அரசாங்கம் வராக்கடன்களை சலுகையாக அறிவித்து ரத்து செய்து வருகின்றன.

    மேலும் வராக்கடன் கணக்குகளை அடிமாட்டு விலைக்கு தனியார் கம்பெனிகளுக்கு விற்று வருகின்றனர். இது உடனடியாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

    இதுபோன்ற கோரிக்கைகளை முன் வைத்து நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தம் நடக்கிறது. இதனால் வங்கி சேவை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனை முடங்கியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×