search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு
    X

    ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு

    ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் ஜனாதிபதியை இன்று நேரில் சந்தித்து ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வலியுறுத்த உள்ளனர்.
    சென்னை:

    ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் ஜனாதிபதியை இன்று நேரில் சந்தித்து ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வலியுறுத்த உள்ளனர்.

    சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வெளியேறிய ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    “மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது, அவரை நாங்கள் யாரும் பார்க்கவில்லை. சசிகலா எங்களை பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை. பொதுமக்கள் மனதில், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக எண்ணுகிறார்கள். இதனை கருத்தில்கொண்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும்” என்று ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக இருந்தபோது அதிரடியாக அறிவித்தார்.

    இந்தநிலையில் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் தோல்வியடைந்தார். இதையடுத்து சென்னை ஆர்.கே.நகரில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் கூட்டத்தில் பேசும்போது, ஜெயலலிதா மரணம் குறித்து மத்திய புலனாய்வு விசாரணை நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்கிடையே ஜெயலலிதா மரணம் குறித்து அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் ஐகோர்ட்டில் விளக்க அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.

    தமிழக அரசு தரப்பில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க எந்தவித முடிவும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

    இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கடந்த சில நாட்களாக பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஜெயலலிதா மரணத்தின் உண்மை நிலையை அறிந்துகொள்வதில் பொதுமக்கள் மிகவும் ஆவலாக உள்ளனர். ஆகையால் அதனை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பது ஒன்றாகும். அதன்படி ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை அல்லது நீதி விசாரணை நடத்தவேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்துவதற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் தங்களுக்கு நேரம் ஒதுக்கி தருமாறு கேட்டிருந்தனர்.

    இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேரம் ஒதுக்கியுள்ளதாக தெரிகிறது.

    ஆகவே இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்க உள்ளனர். இதற்காக டாக்டர் மைத்ரேயன் எம்.பி. தலைமையில் எம்.பி.க்கள் அசோக்குமார், சுந்தரம், சத்யபாமா, வனரோஜா, ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, செங்குட்டுவன், மருதைராஜா, பார்த்திபன், எஸ்.ராஜேந்திரன், விழுப்புரம் லட்சுமணன் உள்பட ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் டெல்லி செல்கின்றனர்.

    அங்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை அல்லது நீதி விசாரணை நடத்தக்கோரி வேண்டுகோள் விடுக்க உள்ளனர். மேலும் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோரையும் சந்தித்து தங்களுடைய கோரிக்கை தொடர்பான மனுவையும் அவர்கள் கொடுக்க உள்ளனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை டெல்லியில் சந்தித்து தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தி.மு.க. உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் அமளி குறித்து புகார் தெரிவித்தார். பிரதமர் மோடியை டெல்லியில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சந்தித்து பேசினார்.

    இந்த நிலையில் தற்போதுள்ள அரசின் மீது அதிருப்தியில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.க்கள் (அ.தி.மு.க. அதிருப்தி எம்.பி.க்கள்) ஜனாதிபதியை சந்திக்க உள்ளது தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    Next Story
    ×