search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி அருகே நடைபெற்ற அ.தி.மு.க. கூட்டத்தில் அமைச்சர்கள் மீது கல்வீச்சு
    X

    திருச்சி அருகே நடைபெற்ற அ.தி.மு.க. கூட்டத்தில் அமைச்சர்கள் மீது கல்வீச்சு

    திருச்சியில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மீது கல் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருச்சி:

    தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 122 பேர் கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமியும் சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபித்து தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.

    இந்தநிலையில் தங்களது தொகுதிக்கு செல்லும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    இதனிடையே அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மீது கல் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை பழையூர் மேட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அழகேசன் தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மேலும் 70 பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கிடையே அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு சிறிய கல் மேடையில் வந்து விழுந்தது. அதைப்பார்த்த அமைச்சர், எத்தனை கல் வந்து விழுந்தாலும், பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் தொடர்ந்து செயல்படுவோம், என்று கூறினார். கல்வீசிய நபர்கள் யாரென்று தெரியவில்லை. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×