search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா படம் வைப்பதை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
    X

    ஜெயலலிதா படம் வைப்பதை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    அரசு நலத்திட்டங்கள், அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம் வைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், அரசு பதில் அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவகத்தை அரசு செலவில் கட்டக்கூடாது என்றும் அரசு அலுவலகங்கள், அரசு திட்டங்கள் ஆகியவற்றில் உள்ள ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்ற வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் எனக்கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ரமேஷ், நீதிபதிமகாதேவன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் கூறினார்கள்.

    அப்போது மூத்த வக்கீல் வில்சன் எழுந்து, ‘சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட மறைந்த முதல் -அமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பள்ளிக்கூட பைகளில், இலவச லேப்டாப்புகளில் மற்றும் அரசு நலத்திட்டங்களில் இடம் பெறக்கூடாது என்று சேப்பாக்கம் தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பழகன் வழக்கு தொடர உள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும்’ என்று கூறினார்.

    அதேபோல, வக்கீல் கே.பாலுவும் ஆஜராகி, ஜெயலலிதாவின் புகைப்படம் அரசு திட்டங்களில் இடம் பெறக்கூடாது என்று வழக்கு தொடர உள்ளதாக கூறினார். இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை பிற்பகலில் விசாரிப்பதாக கூறினார்கள்.

    அதன்படி மூன்று வழக்குகளும் இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, மனுதாரர்களின் புகார்கள் குறித்து தமிழக அரசு, தலைமைச் செயலாளர் மற்றும் ஆளுநரின் செயலாளர் ஆகியோர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மார்ச் 20-ம் தேதிககு ஒத்திவைத்தனர்.
    Next Story
    ×