search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 9-ம் வகுப்பு மாணவி பலி
    X

    சேலம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 9-ம் வகுப்பு மாணவி பலி

    சேலம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 9-ம் வகுப்பு மாணவி பலியானார். பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுததை பார்த்தபோது அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. விசைத்தறி தொழிலாளி. இவரது மகள் பூமிகா (வயது 14). இவள் தாரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 21-ந்தேதி அன்று பள்ளிக்கு வந்த மருத்துவ குழுவினர் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி போட்டனர்.

    அப்போது, மாணவி பூமிகாவுக்கும் தட்டம்மை- ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டது. அன்று முதல் மாணவி பூமிகாவுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்து கொண்டே வந்தது.

    இதைதொடர்ந்து கடந்த 24-ந்தேதி அன்று சேலம் அரசு மருத்துவமனையில் பூமிகா சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டாள். அங்கு பூமிகாவின் உடல் நிலையை பரிசோதித்து விட்டு டாக்டர்கள் தனிவார்டுக்கு மாற்ற பரிந்துரை செய்தனர்.

    இதையடுத்து தனி வார்டுக்கு மாற்றப்பட்டு பூமிகாவுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த தனி வார்டுக்குள் டாக்டர்கள், நர்சுகள் தவிர மற்ற நபர்கள் செல்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. எனவே, பெற்றோர் மற்றும் உறவினர்கள் உள்பட வார்டுக்குள் செல்ல யாரையும் அனுமதிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்ட பூமிகா அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணி அளவில் பரிதாபமாக இறந்தாள்.

    இது குறித்து மருத்துவமனை டாக்டர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி இறந்ததற்கான காரணம் என்ன?, பன்றி காய்ச்சலா? அல்லது வேறு ஏதேனும் மர்ம காய்ச்சலா? என்பன போன்ற பல்வேறு கோணத்தில் மருத்துவமனையின் டாக்டர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மகள் உயிருக்கு போராடிய கடைசி நேரத்தில் கூட மகளை பார்க்க முடியவில்லையே என்று கூறி பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுததை பார்த்தபோது அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.

    Next Story
    ×