search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்ணாடம் அருகே கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் நகை–பணம் கொள்ளை
    X

    பெண்ணாடம் அருகே கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் நகை–பணம் கொள்ளை

    பெண்ணாடம் அருகே கிராம நிர்வாக அலுவலர் வீட்டின் பூட்டை உடைத்து நகை–பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    பெண்ணாடம்:

    பெண்ணாடம் அருகே உள்ள கோனூரை சேர்ந்தவர் ஆசைத்தம்பி மகன் செந்தில்ராஜா(வயது 35). இவர் சத்தியவாடி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். வீட்டில் செந்தில்ராஜாவின் தாய் தமிழ்செல்வி மட்டும் தனியாக படுத்து தூங்கினார்.

    இந்தநிலையில் நேற்று காலை தமிழ்செல்வி எழுந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் வீட்டில் இருந்த பீரோவும் திறந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த தமிழ்செல்வி, இதுகுறித்து செந்தில்ராஜாவுக்கு தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து அவர் வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் இதேபோல் அருகில் உள்ள ஆறுமுகம் என்பவரது வீட்டின் ஜன்னல் கதவையும் மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். அப்போது, அப்பகுதியில் ஆள்நடமாட்டம் இருந்ததால், மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பெண்ணாடம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ஆழ்வார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது, செந்தில்ராஜா வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் கடப்பாரையால் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை–பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    மேலும், பீரோவில் இருந்த வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அடங்கிய ஒரு பையை எடுத்துச்சென்ற அவர்கள் அதனை அருகில் உள்ள வாய்க்காலில் வீசிச்சென்றுள்ளனர். இதையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை–பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×