search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுக்குழு உறுப்பினர்களை திரட்ட ஓ.பன்னீர்செல்வம் முடிவு
    X

    பொதுக்குழு உறுப்பினர்களை திரட்ட ஓ.பன்னீர்செல்வம் முடிவு

    ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பொதுக்குழு உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். விரைவில் பொதுக்குழு கூட்டப்பட்டு பன்னீர்செல்வம் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
    சென்னை:

    ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அ.தி.மு.க. பிளவு பட்டது. ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணியினர் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்கள்.

    இந்த அணியில் அவைத் தலைவர் மதுசூதனன், பொன்னையன், கே.பி.முனுசாமி, பி.எச்.பாண்டியன், நத்தம் விசுவநாதன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் 10 எம்.எல்.ஏ.க்களும் 11 எம்.பி.க்களும் இருக்கிறார்கள்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது. விரைவில் பொதுக்குழுவை கூட்டி புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என்று ஏற்கனவே மதுசூதனன் அறிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சசிகலா ஜெயிலுக்கு சென்றார். அவர் ஜெயிலுக்கு செல்வதற்கு முன்பு டி.டி.வி.தினகரனை துணை பொதுச்செயலாளராக நியமித்தார். தற்போது கட்சி பணிகளை தினகரன் கவனிக்கிறார்.

    தினகரன் தேர்வு செய்யப்பட்டதும் செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி நிருபர்களுக்கு பேட்டியளித்த பன்னீர்செல்வம் கூறியதாவது:-

    கட்சியில் ஒரு அசாதாரண சூழல் ஏற்பட்டு பொதுச்செயலாளர் பொறுப்பு காலியாக இருந்தால் அடிப்படை உறுப்பினர் அனைவரும் யாருக்கு அதிகமாக வாக்களிக்கிறார்களோ அவர் தான் கட்சியின் பொதுச்செயலாளராக வர முடியும்.

    அதுவரை ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள் தான் பதவியில் நீடிப்பார்கள். கட்சி விதிகளுக்கு புறம்பாக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது. அவரால் நியமிக்கப்பட்டவர்களும் செல்லாது. அவரால் விலக்கப்பட்டவர்களும் செல்லாது.

    2011-ல் சசிகலா உள்ளிட்டவர்களை ஜெயலலிதா அவரது இல்லத்தில் இருந்து வெளியேற்றினார். மீண்டும் சசிகலாவை மட்டும்தான் அனுமதித்தார். ஜெயலலிதாவால் நீக்கப்பட்டவர்களை அவர் இறக்கும் வரை கட்சியில் சேர்க்கவில்லை.

    அடிப்படை உறுப்பினராக கூட இல்லாதவர் பொறுப்பில் இருப்பதாக கூறுவதும், எங்களுக்கு வேண்டுகோள் விடுப்பதும் ஆச்சரியமாக உள்ளது. இந்த நிலைமை விரைவில் மாறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அடுத்த கட்டமாக பொதுக்குழுவை கூட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இதற்காக மாவட்டம் தோறும் பொதுக்குழு உறுப்பினர்களையும், தொண்டர்களையும் திரட்டி வருகிறார்கள்.

    ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பொதுக்குழு உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். விரைவில் பொதுக்குழு கூட்டப்பட்டு பன்னீர்செல்வம் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படுவார். அதன் பிறகு அடுத்த கட்ட பணிகள் தொடங்கும் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×