search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. ஆட்சியை அகற்றும்வரை ஓயமாட்டேன்: ஸ்டாலின் அறிக்கை
    X

    அ.தி.மு.க. ஆட்சியை அகற்றும்வரை ஓயமாட்டேன்: ஸ்டாலின் அறிக்கை

    அ.தி.மு.க. ஆட்சியை அகற்றும்வரை ஓயமாட்டேன் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சட்டமன்றத்தில் என்மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொலைக்காட்சியில் பார்த்த கழக உடன்பிறப்புகள் மிகவும் பதற்றமடைந்து என்னை தொலைபேசி மற்றும் கைபேசி வாயிலாக தொடர்ந்து விசாரித்த வண்ணம் இருக்கிறார்கள்.

    அந்த சமயத்தில் சில உடன் பிறப்புகள் ஆவேசமாகவும், உணர்ச்சி மிகுந்தும் என் மீதான தாக்குதல் குறித்து விசாரிக்கும் போது “ஜெயிலில் இருப்பவரால் இயக்கப்படும் ஆட்சியிலும், "அந்த ஆட்சியில் உள்ள சட்டமன்றத்திலும்" இதற்கு மேல் வேறு எதையும் எதிர் பார்க்க முடியாது என்பதை விளக்கி சொல்லி இது போன்ற சலசலப்புக்களுக்கு எல்லாம் எந்தக் காலத்திலும் தி.மு.க. அஞ்சாது என்ற உறுதியை மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகிறேன்.

    அது மட்டுமின்றி இது போன்ற தாக்குதலைப் பார்த்து பயந்து விட மாட் டேன் என்று அவர்களிடம் எடுத்துக் கூறி இந்த போராட்டம் ஓயாது என்றும் அனைத்து கட்சிகளையும் சேர்த்துக் கொண்டும் இந்த அறவழி போராட்டத்தில் ஈடுபடுவேன்.

    இப்படியொரு சூழ்நிலையில் குறிஞ்சிப்பாடி தொகுதியைச் சேர்ந்த கழக தொண்டர் வடிவேலு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது. அவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றன என்பதும்

    அந்தப் பிள்ளைகள் எல்லாம் கல்லூரி மற்றும் பள்ளி படிப்புகளைக் கூட இன்னும் முடிக்காமல் இருக்கிறார்கள் என்றும் கழக மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் என்னிடம் தெரிவித்த போது நான் பேரதிர்ச்சிக்கு உள்ளானேன். அவரது குடும்பத்திற்கு தேவையான உதவிகளை நிச்சயம் கழகம் பொறுப்பு எடுத்துக் கொள்ளும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

    தயவு செய்து எந்த உடன்பிறப்பும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

    மக்களின் கேள்வியைத் தான் சட்டமன்றத்தில் தி.மு.க.வும் தோழமைக் கட்சியினரும் கோரிக்கையாக வைத்தனர். குற்றவாளியின் பினாமி ஆட்சியை ஏற்காத அ.தி.மு.க அணியினரும் இதைத்தான் கோரினார்கள்.

    ரகசிய வாக்கெடுப்பு அல்லது வேறொரு நாளில் வாக்கெடுப்பு என்கிற இரண்டு கோரிக்கைகளையும் தனது வானளாவிய அதிகாரத்தால் புறந்தள்ளி, பினாமி ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக சபாநாயகர் செயல்பட்டதே சட்டமன்றத்தில் நடந்த அனைத்து ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கும் காரணமாகும்.

    எதிர்க்கட்சியினரின் கார்களை சோதனையிடுவதில் தொடங்கி, காவல்துறை அதிகாரிகளை சட்டமன்ற காவலர்கள் உடையில் உள்ளே அனுப்பி தாக்குதல் நடத்தியது வரை முழுக்க முழுக்க ஆளுங்கட்சியின் திட்டமிட்ட ஜனநாயகப் படுகொலையாகும். இவை அனைத்துக்கும் சபாநாயகர் துணை நின்றார் என்பது வேதனையானதும் வெட்கக்கேடானதுமாகும்.

    இந்நிலையில், எதிர்க்கட்சியினரின் நியாயமான கோரிக்கையை ஏற்று தொடர்ந்து அவையை நடத்தும்படி வலியுறுத்திய போதும், அவையை ஒத்தி வைத்து ஏதோ ஒரு சில உத்தரவுகளை எதிர் பார்த்து சபாநாயகர் தன் இருக்கையிலிருந்து வெளியேறிய நிலையில், ஒத்தி வைக்கப்பட்ட அவையில் காலியாக இருந்த அவரது இருக்கையில் தி.மு. கழக உறுப்பினர்கள் ப.ரங்கநாதன், கு.க.செல்வம் ஆகியோர் அமர்ந்ததை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும் அவர்கள் சார்ந்துள்ள தி.மு.க.வின் செயல்தலைவர் என்ற முறையிலும் நான் அதனை ஏற்கவில்லை.


    சட்டமன்ற நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்ப மறுக்கும் குற்றவாளியின் பினாமி அரசு, ஒரு தரப்பு காட்சிகளை மட்டுமே எடிட் செய்து ஊடகங்களுக்குத் தருகிற நிலையில், கழகத்தினர் மேற்கொள்ளும் துரும்பளவு செயல்பாடுகளும் தூணாக்கப்படும் என்பதை தி.மு.கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய செயல்களை இனி ஒருபோதும் மேற்கொள்ளாமல் கண்ணியம் காத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    சபாநாயகரின் ஒரு தரப்பு நடவடிக்கை, சட்டமன்ற நடவடிக்கைகளின் ஒரு தரப்புக்காட்சிகள் இவற்றையெல்லாம் சட்டரீதியாக எதிர்கொள்ள தி.மு.கழகம் தயாராக உள்ளது. குற்றவாளியின் பினாமி ஆட்சியை அகற்ற மக்கள் மன்றத்துடன் இணைந்து களம் காண்கிறது. அதற்கேற்ற வகையில் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்ணியம் காத்து அவையிலும், வெளியிலும் களப்பணி ஆற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
    Next Story
    ×