search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக சட்டசபை சந்திக்கும் 4-வது நம்பிக்கை ஓட்டெடுப்பு
    X

    தமிழக சட்டசபை சந்திக்கும் 4-வது நம்பிக்கை ஓட்டெடுப்பு

    தமிழக சட்டசபையில் 30 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அ.தி.மு.க. மீண்டும் நம்பிக்கை ஓட்டெடுப்பு சோதனையை எதிர் கொள்கிறது.
    சென்னை:

    தமிழக சட்டசபை வரலாற்றில் நாளை (சனிக்கிழமை) நடைபெறுவது 4-வது நம்பிக்கை ஓட்டெடுப்பாகும்.

    இதற்கு முன்பு 1952, 1972, 1988-ம் ஆண்டுகளில் தமிழக சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது.

    1952-ம் ஆண்டு ஜூலை மாதம் 3-ந்தேதி முதல் நம்பிக்கை வாக்கெடுப்பை தமிழக சட்டசபை சந்தித்த போது காங்கிரஸ் கட்சியின் ராஜாஜி முதல்-அமைச்சராக இருந்தார். அப்போது தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்தியாவே அந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ஆச்சரியத்துடன் பார்த்தது. அதற்கு காரணம், இந்தியாவிலேயே முதல் முதலாக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை ஓட்டெடுப்பாக அது இருந்ததுதான்.

    1952-ம் ஆண்டு அருப்புக்கோட்டையில் நடந்த இடைத்தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சி வேட்பாளரிடம், காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது. இதனால் ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

    உடனே ராஜாஜி தன் அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பை சட்டசபையில் நடத்தினார். அதில் அவர் 200 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றார். 151 எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்திருந்தனர்.

    1972-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந்தேதி தமிழக சட்டசபையில் 2-வது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. அப்போது கருணாநிதி முதல்- அமைச்சராக இருந்தார்.

    தி.மு.க. பொருளாளர் ஆக இருந்த எம்.ஜி.ஆரை, முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி கட்சியில் இருந்து நீக்கினார். இதனால் தி.மு.க.வில் கடும் சலசலப்பு ஏற்பட்டது.

    நிறைய எம்.எல்.ஏ.க்கள் எம்.ஜி.ஆரை ஆதரிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து கருணாநிதி தனது அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பை முன்மொழிந்தார். அந்த ஓட்டெடுப்பில் கருணாநிதி 172 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவைப் பெற்று மிக, மிக எளிதாக வெற்றி பெற்றார்.

    தமிழக சட்டசபையில் 1988-ம் ஆண்டு ஜனவரி மாதம் 28-ந்தேதி மூன்றாவது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த ஓட்டெடுப்புதான் தமிழக சட்டசபை சந்தித்த கடைசி நம்பிக்கை ஓட்டெடுப்பு ஆகும்.

    அப்போது எம்.ஜி.ஆர். மரணத்தைத் தொடர்ந்து அவரது மனைவி ஜானகி அம்மாள் முதல்வர் பதவியை ஏற்றிருந்தார். இதன் காரணமாக அ.தி.மு.க. கட்சி இரண்டாக பிளவுபட்டு அ.தி.மு. க.- ஜா என்றும் அ.தி.மு. க.- ஜெ என்றும் பிரிந்தது.

    ஜானகி அம்மாளை 99 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும், ஜெயலலிதாவை 33 எம்.எல்.ஏ.க்களும் ஆதரித்தனர். இதைத் தொடர்ந்து சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு பலப்பரீட்சைக்கு உத்தரவிடப்பட்டது.

    சட்டசபையில் அப்போது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்த போது பி.எச்.பாண்டியன் சபாநாயகராக இருந்தார். மூத்த அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன் நம்பிக்கை ஓட்டெடுப்பு தீர்மானம் கொண்டு வந்து முன்மொழிந்தார்.

    அந்த சமயத்தில் சட்டசபையில் கலவரம் ஏற்பட்டது. இதனால் சபாநாயகர் பி.எச். பாண்டியன் தன் அதிகாரத்தை பயன்படுத்தி ஜெயலலிதாவை ஆதரித்த 33 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஜானகி அம்மாள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அரசியல் குழப்பம் உருவானது. இதைத் தொடர்ந்து நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஜானகி அம்மாள் வெற்றி பெற்ற 2-வது நாளில் அவரது மந்திரிசபை டிஸ்மிஸ் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    அதன் பிறகு ஜெ-ஜா அணிகள் ஒன்றானது. 1991-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

    30 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அ.தி.மு.க. மீண்டும் நம்பிக்கை ஓட்டெடுப்பு சோதனையை எதிர் கொள்கிறது. 1988-ல் ஜானகி, ஜெயலலிதா இடையே விரிசல் மிக அதிக அளவில் இருந்ததாலும் நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு பிறகு இரு அணிகளும் ஒன்றானது.

    தற்போது அரசியல் சூழ்நிலை வேறு விதமாக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி நாளை நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற்று விடுவார். ஆனால் அது 1988-ல் அ.தி.மு.க.வின் இரு கோஷ்டிகளை ஒருங்கிணைக்க உதவியது போல இந்த தடவையும் உதவுமா? என்பதில் நிச்சயமற்ற நிலை நிலவுகிறது.

    எனவே நாளைய நம்பிக்கை ஓட்டெடுப்பு மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழக சட்டசபையில் இதுவரை 12 தடவை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த 12 தடவையும் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறவில்லை. ஆளும் கட்சிகளே வென்றது.

    கடைசியாக தமிழக சட்டசபையில் 1983-ம் ஆண்டு நவம்பர் 16-ந்தேதி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. எம்.ஜி.ஆர். அமைச்சரவை மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த உமாநாத் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார்.

    இந்த தீர்மானத்தை ஆதரித்து 49 எம்.எல்.ஏ.க்களே வாக்களித்தனர். 125 எம்.எல். ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்து அந்த தீர்மானத்தை தோற்கடித்தனர்.

    அதன்பிறகு கடந்த 34 ஆண்டுகளாக தமிழக சட்டசபையில் யாரும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×