search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கோட்டை அருகே அட்டகாசம் செய்யும் சிறுத்தையால் வெளியில் நடமாட பொதுமக்கள் அச்சம்
    X

    செங்கோட்டை அருகே அட்டகாசம் செய்யும் சிறுத்தையால் வெளியில் நடமாட பொதுமக்கள் அச்சம்

    செங்கோட்டை அருகே அட்டகாசம் செய்யும் சிறுத்தையால் வெளியில் நடமாட பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    செங்கோட்டை:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் உள்ள செங்கோட்டை, கடையம், களக்காடு பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இந்த பகுதியில் சிறுத்தை, புலி, கரடி போன்ற விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி நுழைகின்றன.

    தமிழக- கேரள எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான செங்கோட்டை அருகில் உள்ள புளியரை, பண்பொழி, குற்றாலம், கண்ணுப்புளிமெட்டு உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி சிறுத்தை நடமாட்டம் உள்ளது.

    கடந்தாண்டு புளியரையில் செந்தூர்பாண்டியன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாட்டை சிறுத்தை அடித்துக் கொன்றது. அதன் பின்னர் கேரள மாநிலம் அரியங்காவு கடவன்பாறை என்ற இடத்தில் தொழுவத்தில் கட்டியிருந்த 4 ஆடுகளை சிறுத்தை அடித்துக் கொன்றது.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு செங்கோட்டையை அடுத்த பண்பொழியை சேர்ந்த சுப்பையா என்பவரை சிறுத்தை அடித்துக் கொன்றது. கால்நடைகளை தாக்கி வந்த சிறுத்தை மனிதர்களை தாக்கத் தொடங்கியதால் அப்பகுதியில் உள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனால் அட்டகாசம் செய்யும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். வனத்துறையினரோ, ஏற்கனவே சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்துள்ளோம், மேலும் கூண்டுகள் வைக்க தேவையில்லை என கூறிவிட்டனர். வனத்துறையினர் வைத்துள்ள கூண்டில் இது வரை சிறுத்தை சிக்கவில்லை.

    இந்நிலையில் நேற்று அதிகாலையில் புளியரை தட்சிணாமூர்த்தி நகர் பகுதி குடியிருப்பில் புகுந்த சிறுத்தை அழகம்மாள் என்பவரின் வீட்டு தொழுவத்தில் கட்டியிருந்த 2 ஆடுகளை கொன்றது. ஒரு ஆட்டை முழுவதுமாக தின்று விட்டு மற்றொரு ஆட்டை பாதியளவு தின்றது.

    தொடரும் சிறுத்தை அட்டகாசத்தால் செங்கோட்டை சுற்றுவட்டார பொதுமக்கள் வெளியில் நடமாடவே அஞ்சுகின்றனர். கூண்டுக்குள் சிக்காமல் அட்டகாசம் செய்யும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மனிதரை தாக்கி உள்ளதால் அதனை சுட்டுக் கொல்ல அனுமதி பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து செங்கோட்டை வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘இந்த பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க கடவன்பாறை, குறவன்பாறை, பகவதிபுரம் வடக்கு பகுதி, ‘எஸ்’ வளைவு உள்ளிட்ட 7 இடங்களில் கூண்டு வைத்துள்ளேம். தற்போது தட்சிணாமூர்த்தி நகர் பகுதியிலும் 8-வதாக ஒரு கூண்டு வைத்துள்ளோம். மேலும் 10-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனவே விரைவில் அட்டகாசம் செய்யும் சிறுத்தை கூண்டில் சிக்கும் என்றார்.
    Next Story
    ×