search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலோரத்தில் பாறாங்கற்களில் படிந்திருக்கும் டீசலை அகற்றும் பணி தீவிரம்
    X

    கடலோரத்தில் பாறாங்கற்களில் படிந்திருக்கும் டீசலை அகற்றும் பணி தீவிரம்

    சென்னை திருவொற்றியூர் பாரதியார்நகர் கடலோரத்தில் உள்ள பாறாங்கற்களில் படிந்திருக்கும் டீசலை ரசாயன கலவை மூலம் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    சென்னை:

    சென்னையை அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே 2 கப்பல்கள் மோதிக்கொண்ட விபத்தில், கப்பலில் இருந்த டீசல் கடலில் கொட்டியது. இதில் திருவொற்றியூர் பாரதியார்நகர் கடலோர பகுதியில் அதிகப்படியான டீசல் படிமம் மிதந்து வருகிறது. படிந்திருக்கும் டீசலை அகற்றும் பணியில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். டீசல் படிமம் அகற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணியில் ஏராளமான தன்னார்வலர்களும், இளைஞர்களும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

    படிந்திருக்கும் டீசலை அகற்றும் பணிகளை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் பார்வையிட்டார். மேலும் பல்வேறு அரசியல் கட்சியினரும் பார்வையிட்டு வருகின்றனர்.

    கடலில் படிந்திருக்கும் டீசல் வேறு இடத்துக்கு பரவாமல் இருக்க அதனை சுற்றிலும் ‘பூம்’ எனும் ரப்பர் மிதவை தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. தவிர பைபர் படகு மூலமும் சென்று கடற்பரப்பில் பரவி கிடக்கும் டீசல் படிமத்தை கரை நோக்கி ஒன்று சேர்த்தும் வருகின்றனர். சூப்பர் சக்கர் எந்திரங்களில் அடைப்பு ஏற்படுவதால், தற்போது வாளிகள் மூலம் மட்டுமே டீசல் படிமம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    திருவொற்றியூர் பாரதியார்நகரில் இருந்து அகற்றப்படும் டீசல் படிமம் பெரிய பேரல்களில் சேகரிப்பட்டு எண்ணூர் துறைமுகம் மற்றும் எர்ணாவூர் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அங்கு நுண்ணுயிரிகள் கொண்டு டீசல் படிமம் சுத்திகரிக்கப்பட உள்ளது. இதுவரை வடசென்னை பகுதி முழுவதிலும் இருந்து 170 டன் வரை டீசல் படிமம் அகற்றப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருவொற்றியூரில் கடலோரத்தில் கடல் அரிப்புக்காக போடப்பட்டிருந்த பாறாங்கற்கள் அனைத்துமே டீசல் படிந்து கருமையாக காட்சி அளிக்கிறது. எனவே படிந்திருக்கும் டீசலை அகற்றும் பணியோடு, பாறாங்கற்களை சுத்தப்படுத்தவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இதற்காக ரசாயனம் கலந்த நீர் பம்புகள் மூலம் பாறாங்கற்களில் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது. இந்த பணி ஊரக வளர்ச்சி துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் மூலம் தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் டீசல் படிமம் அகற்றும் பணியை சமத்துவ மக்கள் கட்சியின் மண்டல செயலாளர் எம்.ஏ.சேவியர் தலைமையில் நிர்வாகிகள் பார்வையிட்டனர். பணியாளர்களுக்கு குடிநீர் பாக்கெட்டுகள், மோர் உள்ளிட்ட பானங்களை வழங்கினர். இதுதவிர டீசல் படிமம் அகற்றும் பணிகளை பார்வையிடும் அந்த பகுதி மக்களின் வசதிக்காக கடலோர பாறைகளின் மீது மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இதுதவிர குழந்தைகள், பெண்கள், முதியோர் பாறைகளில் ஏறக்கூடாது என்று அவ்வப்போது ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×