search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலில் படிந்திருக்கும் டீசலை அகற்ற ‘பீட்ஸ் சார்ப்’ மூலிகை பொடியை தூவும் காட்சி
    X
    கடலில் படிந்திருக்கும் டீசலை அகற்ற ‘பீட்ஸ் சார்ப்’ மூலிகை பொடியை தூவும் காட்சி

    கடலில் மிதக்கும் டீசல் படிமத்தை அகற்ற மூலிகை பொடி தூவி கடலோர காவல் படை பரிசோதனை

    கடலில் மிதக்கும் டீசல் படிமத்தை அகற்ற கடலோர காவல் படை அதிகாரிகள் மூலிகை பொடியை தூவி நேற்று பரிசோதனை மேற்கொண்டனர்.
    சென்னை:

    திருவொற்றியூர் பாரதியார்நகர் கடல் பகுதியில் மிதக்கும் டீசல் படிமத்தை அகற்ற கடலோர காவல் படை, கப்பல் படை, கடல்சார் வாரியம், சுற்றுச்சூழல் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் என மத்திய-மாநில அரசுகளின் பல்வேறு துறைகள், தன்னார்வலர்கள் இணைந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் கடலில் மிதக்கும் டீசல் படிமம் இன்னும் முழுவதுமாக அகற்றப்படவில்லை.



    டீசல் படிமத்தை அகற்ற இயற்கையான முறையில் பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். அதன்படி, கனடாவில் வளரும் ‘பீட்ஸ் சார்ப்’ என்ற மூலிகை செடியின், உலர வைக்கப்பட்ட பொடியை கடலில் மிதக்கும் டீசல் படிமத்தின் மீது கடலோர காவல் படை அதிகாரிகள் நேற்று தூவினர்.

    சிறிது நேரத்தில் கடலில் மிதந்த டீசல் படிமத்தை மட்டும் மூலிகை பொடி நன்கு உறிஞ்சியது. டீசல் படிமம் ஒரு திட்டு போல கடல் நீரில் இருந்து விலகி மிதந்தது. இதன் பின்னர் அந்த பகுதியில் மிதந்த டீசல் படிமம் எளிதாக அகற்றப்பட்டது. மூலிகை பொடியை கடலோர காவல் படையினர் நேற்று இரவு மீண்டும் பரிசோதித்தனர்.

    ‘பீட்ஸ் சார்ப்’ செடியின் பொடியை, சென்னையில் சந்தைப்படுத்தும் ‘பிரைம் கோட்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்தின் செயல் முகவரான சதீஷ் சவான் கடலோர காவல் படையை சேர்ந்த அதிகாரிகளிடம் அதன் பயன்பாடு குறித்து விளக்கினார். இந்த மூலிகை பொடியை தொடர்ந்து பயன்படுத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

    இதுகுறித்து சதீஷ் சவான் கூறியதாவது:-

    ‘பீட்ஸ் சார்ப்’ என்பது கனடா நாட்டின் சூழலுக்கு ஏற்ப வளரும் ஒரு வகை மூலிகைச்செடி. இந்த செடியை உலர வைத்து பொடியாக அரைத்துள்ளோம். இந்த மூலிகை பொடியை கடலில் மிதக்கும் டீசல் படிமம், ரசாயன படிமங்களில் தூவினால் போதும், 30 முதல் 40 வினாடிகளில் டீசலில் உள்ள ரசாயனங்களை உறிஞ்சி இழுத்துக்கொள்ளும். அதில் உள்ள ஹைட்ரோ கார்பன்களை மூலிகை பொடி உள்ளே இழுத்துக்கொண்டு, செயல் இழக்கச்செய்துவிடும்.

    ரசாயனங்கள் ஒரு திட்டு போல மிதக்கும். அடுத்த சில மணி நேரத்தில் தரைக்கு வந்து விடும். இதனால் கடல்சார் உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதே சமயம் இந்த மூலிகை பொடி தண்ணீரை உறிஞ்சாது. ஒரு கிலோ அளவுக்கு மூலிகை பொடி தூவினால் 4 கிலோ அளவுக்கு ரசாயனங்களை உறிஞ்சி, செயல் இழக்கச்செய்யும்.

    கடலோர காவல் படை அதிகாரிகளுக்கு இந்த சோதனை திருப்திகரமாக இருந்தது. இதனால் எண்ணூர் துறைமுகத்தில் அந்த மூலிகை பொடியை பரிசோதிக்க வருமாறு எனக்கு அழைப்பு விடுத்தனர். அங்கும் அவர்களுக்கு திருப்தி ஏற்பட்டால் கடலில் கலந்த டீசல் படிமத்தை அகற்றுவதற்கு ‘பீட்ஸ் சார்ப்’ மூலிகை பொடி பயன்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×