search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் 5 நாட்களாக சிறைபிடிக்கப்பட்ட ரெயில் இன்று மீட்பு
    X

    சேலத்தில் 5 நாட்களாக சிறைபிடிக்கப்பட்ட ரெயில் இன்று மீட்பு

    சேலத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவை தடை செய்ய கோரியும் கடந்த 5 நாட்களாக சிறைபிடிக்கப்பட்ட ரெயிலை இன்று போலீசார் மீட்டனர்.
    சேலம்:

    சேலத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவை தடை செய்ய கோரியும் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்பட பல ஆயிரம் பேர் திரண்டு கடந்த 18-ந் தேதி போராட்டத்தை தொடங்கினர்.

    இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவுக்கு எதிராகாவும் தொடர்ந்து கோ‌ஷங்களை எழுப்பி வந்தனர்.

    இந்த நிலையில் 19-ந்தேதி பெங்களூரில் இருந்து கரைக்காலுக்கு சென்ற பயணிகள் ரெயிலை சேலம் பெரியார் மேம்பாலம் அருகே போராட்டக்காரர்கள் சிறை பிடித்தனர்.

    ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்தும், ரெயில் கூரை மீது ஏறி நின்றும் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ரெயில் டிரைவர் ரெயிலை நிறுத்தி விட்டு சென்றார்.

    தொடர்ந்து 5 நாளான இன்று காலை வரை ரெயில் கூரை மீது ஏறியும், தண்டவாளத்தில் அமர்ந்தும் தொடர் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

    மேலும் தண்டவாளத்தில் இரும்பு ராடுகள், சிலாப்புகள் போட்டு தடை ஏற்படுத்தியும், போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை சேலம் மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர்கள் ஜோர்ஜி ஜோர்ஜி, ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரெயில் மறியலில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மாணவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்ததால் கூடுதல் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

    பின்னர் போராட்டக்காரர்களை போலீசார் வெளியேற்றினர். அப்போது போராட்டக்காரர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் விடாமல் போலீசார் அவர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றியதால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    இதையடுத்து ரெயில் முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து ரெயிலை சுற்றி போராட்டகாரர்கள் நெருங்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    ரெயில் தண்டவாளங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாலும், ரெயில் என்ஜின் பகுதியை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தி உள்ளதாலும் ரெயிலை உடனே எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரெயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ரெயிலை எடுத்து செல்வதற்கான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
    Next Story
    ×