search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக சட்டசபையில் ஜல்லிக்கட்டு சட்ட மசோதா 25-ந்தேதி தாக்கல்
    X

    தமிழக சட்டசபையில் ஜல்லிக்கட்டு சட்ட மசோதா 25-ந்தேதி தாக்கல்

    தமிழக சட்டசபையில் ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்காக ஒப்புதல்பெறும் சட்ட மசோதா 25-ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சட்டசபை கூட்டத்தொடர் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது.

    அப்போது கவர்னர் வித்யாசாகர் அரசின் சாதனைகள், புதிய திட்டங்களை விவரித்து ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துகிறார். அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் தனபால் வாசிக்கிறார். சுமார் 2 மணி நேரம் நடைபெறும் சட்டசபை நிகழ்ச்சிகள் அத்துடன் நிறைவு பெறும்.

    இதன்பிறகு சபாநாயகர் தனபால் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தை கூட்டி சபையை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்கிறார்.

    24-ந்தேதி சட்டசபை கூடும்போது ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

    இந்த தீர்மானத்தின் மீது முதல்-அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், சட்டமன்ற கட்சித் தலைவர்கள் சபாநாயகர் உரையாற்றுகிறார்கள்.

    இதேபோல் மறைந்த முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி உள்பட மறைந்த எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது.

    கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் 25-ந்தேதி கொண்டு வரப்பட்டு அதன்மீது எம்.எல்.ஏ.க்கள் பேசுகிறார்கள்.

    அன்றைய தினம் ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்காக ஒப்புதல்பெறும் சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் அந்த அவசர சட்டத்தில் என்னென்ன அம்சங்கள் இடம் பெற்றுள்ளது என்பது தெரியவரும்.

    இதன்மீது எம்.எல்.ஏ.க்கள் காரசார விவாதம் நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தனி அதிகாரிகளின் பதவி காலத்தை நீட்டிப்பதற்காக ஏற்கனவே அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதால் அதற்கான சட்ட மசோதா உள்பட பல முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது.
    Next Story
    ×