search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம், தஞ்சையில் ஜல்லிக்கட்டு ரத்து- அமைச்சர்கள் ஏமாற்றம்
    X

    சேலம், தஞ்சையில் ஜல்லிக்கட்டு ரத்து- அமைச்சர்கள் ஏமாற்றம்

    அமைச்சர்கள் இன்று தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் உள்ளூர் மக்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது.
    சென்னை:

    ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்ததை தொடர்ந்து அலங்காநல்லூரில் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும், சேலம் மாவட்டம் ஆத்தூர் கூலப்பட்டியில் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், தஞ்சை மாவட்டம் திருக்கானூர் பட்டி, மாதாக்கோட்டை ஆகிய ஊர்களில் அமைச்சர் துரைக்கண்ணுவும் ஜல்லிக்கட்டை தொடங்கி வைப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

    ஆனால் பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டம் காரணமாக அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. ரத்து செய்யப்பட்டது.

    சேலம் மாவட்டம் ஆத்தூர் கூலமேட்டில் பாதுகாப்பாக ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக நேற்று மாலை ஆத்தூர் உதவி கலெக்டர் செல்வம் தலைமையில் ஆலோசனை நடந்தது.

    அப்போது ஜல்லிக்கட்டு கூலமேடு பெருமாள் கோவில் திடலில் இன்று காலை தொடங்குவது என்றும், அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியை தொடங்கி வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டின்போது, காயமுற்றால் உடனடியாக தேவையான முதலுதவி அளிக்க விளையாட்டு திடல் அருகில் கால்நடை மற்றும் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவக்குழு, மற்றும் தீயணைப்பு வாகனங்கள் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளும் அங்கு செய்யப்பட்டது. வாடிவாசல் அமைப்பதற்காக பொருட்களும் கொண்டு வரப்பட்டன. வருவாய் அதிகாரிகளும் அங்கு வந்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய முயன்றனர்.

    ஆனால் இதற்கு கூலமேடு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதன் காரணமாக பதட்டமான சூழ்நிலை உருவானது. இதையடுத்து இன்று நடக்க இருந்த ஜல்லிக்கட்டு திடீரென ரத்து செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டுக்காக அழைத்துச் செல்லப்பட்ட காளைகளும் திருப்பி அனுப்பப்பட்டது. கூலமேட்டில் முகாமிட்டிருந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

    தஞ்சை மானோஜிப்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. போட்டியை அமைச்சர் துரைக்கண்ணு தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதில் கலெக்டர் அண்ணாத்துரை, கு. பரசுராமன் எம்.பி., ரெங்கசாமி எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என கூறப்பட்டது.

    போட்டிக்கான இடமும் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் போட்டி நடத்த முடியாத சூழ்நிலை நிலவியது. இதையடுத்து போட்டி ரத்து செய்யப்பட்டது.

    பூதலூரில் மற்றொரு நாள் போட்டி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நாகை மாவட்டம் திருக்கடையூரில் ஏற்கனவே தடையை மீறி ரேக்ளா போட்டி நடத்தப்பட்டு விட்டது. இதனால் தற்போது போட்டி நடைபெறவில்லை.
    Next Story
    ×