search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
    X

    ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

    ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
    சென்னை :

    ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்க கோரி தி.மு.க. சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு தி.மு.க., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

    தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி, எம்.பி.க்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஏ.வ.வேலு, கே.என்நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சுதர்சனம், மாநில வர்த்தக அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், துணை செயலாளர் பாண்டிச்செல்வம் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் மாநில, மாவட்ட நிர்வாகி கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தின் நிறைவில் மு.க.ஸ்டாலின் பேசிய தாவது:-

    ஜல்லிக்கட்டு போட்டியை பெருமையாக கூறவேண்டுமானால் “மெரினா புரட்சி” என்று கூறும் அளவுக்கு அந்தப் போராட்டம் வர லாற்றில் இடம் பெறப்போகிறது. நாம் பல போராட்டங்களைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம்.

    இன்றைக்கு மெரினா போராட்டமும் இடம்பெறக் கூடிய வகையில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியுள்ள மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தி.மு.க.வின் சார்பில் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் நன்றியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

    முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு புறப்பட்ட போது, தி.மு.க. சார்பில் வரவேற்கிறோம், மகிழ்ச்சியடைகிறோம், வாழ்த்துகிறோம், வெற்றியோடு திரும்பி வாருங்கள், என்றேன்.

    நாங்கள் கட்சி ரீதியாக இதை பார்க்கவில்லை. அரசியல் ரீதியாக நாங்கள் பார்த்திருந்தால் எதையெதையோ சொல்லியிருக்கலாம். ஆனால், கண்ணியத்தோடு, அரசியல் நாகரிகத்தோடு, இது தி.மு.க. அ.தி.மு.க.வுக்கு இருக்கக்கூடிய பிரச்சினை இல்லை, ஒட்டுமொத்த தமிழர்களின் வீரவிளையாட்டாக இருக்கக்கூடிய ஜல்லிக்கட்டுக்கான பிரச்சினை. ஆக, அந்த உணர்வோடு நாங்கள் அதை வரவேற்றோம்.

    இதே அவசர சட்டத்தை மாநில அரசு முன்பே கொண்டுவந்திருக்கக் கூடாதா? தானாக செய்ய வேண்டியதை தடியால் அடித்துதான் செய்ய வேண்டிய சூழ்நிலை இன்று தமிழ்நாட்டிலே இருக்கிறது. நாங்கள் மக்கள் இயக்கமாக மாறிய பிறகு இன்றைக்கு அவசர சட்டத்தை அரசு கொண்டுவருகிறது என்று சொன்னால் வரவேற்கிறோம். ஆனால் அதேநேரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பதுதான் நம்முடைய குறிக்கோள். தமிழ் இளைஞர்களின் உணர்வு மதிக்கப்பட வேண்டும், தமிழ் கலாசாரம் போற்றப்பட வேண்டும், காப்பற்றப்பட வேண்டும் என்ற காரணத்தினால்தான் அவசர சட்டம் என்று சொன்னவுடன் நாங்கள் வரவேற்றோம். அதை யாரும் மறுக்கவில்லை.

    ஆனால், அவசர சட்டம் மட்டும் கொண்டுவந்தால் போதாது, காட்சிப்படுத்தக் கூடிய பட்டியலிலிருந்து காளையை நீக்கக்கூடிய அந்த சட்டத்தையும் கொண்டு வர வேண்டும் என்பது தான் தி.மு.க.வின் நோக்கம் என்பதை இந்த உண்ணாவிரதப் அறப்போராட்டத்தின் கோரிக்கையாக கூற விரும்புகிறேன். அதுதான் நிரந்தரத் தீர்வாக அமைந்திட முடியும்.

    இந்த ஆண்டு மட்டுமல்ல எந்த ஆண்டாக இருந்தாலும் பொங்கல் விழா என்று வருகிறபோது ஜல்லிக்கட்டுக்கு தடையே இருக்கக்கூடாது. அப்படி ஒரு சட்டத்தை இந்த அரசு உருவாக்க முன்வர வேண்டும். எனவே, மாநில அரசின் அவசர சட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், மத்திய அரசு தன்னுடைய அறிவிக்கையை வாபஸ் பெற்று காளைகளை வைத்து ஜல்லிக்கட்டு நடத்திட வழிவகை அமைத்து தர வேண்டும் என்று நான் இந்த நேரத்திலே கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

    நிரந்தர தீர்வை காணக் கூடிய வகையில், மத்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையை இந்த நேரத்திலே எடுத்துவைத்து இந்த உண்ணாவிரத அறப்போராட்டத்தில் பங்கேற்று தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய அத்தனை பேருக்கும் நன்றியை தி.மு.க. சார்பில் தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் மு.க.ஸ்டாலின் உள்பட மேடையில் இருந்த அனைவரும் பழரசம் அருந்தி உண்ணாவிரதத்தை நிறைவு செய்தனர்.
    Next Story
    ×