search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏறுதழுவுதல் விளையாட்டை நடத்துவதற்காக சிறப்பு சட்டம் இயற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி
    X

    ஏறுதழுவுதல் விளையாட்டை நடத்துவதற்காக சிறப்பு சட்டம் இயற்றக்கோரிய வழக்கு தள்ளுபடி

    ஏறுதழுவுதல் விளையாட்டை நடத்துவதற்கு சிறப்பு சட்டம் இயற்றக்கோரிய பொதுநல வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு பொதுநல வழக்குகள் மையத்தின் நிர்வாக அறங்காவலர் கே.கே.ரமேஷ். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், ‘ஏறுதழுவுதல், மஞ்சு விரட்டு, மாடு பிடி திருவிழா ஆகியவை கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வரும் பாரம்பரிய, கலாசார விளையாட்டுகள் ஆகும்.

    இதுகுறித்து தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் குறிப்புகள் உள்ளன. இந்த விளையாட்டுகளில் மாடுகள் சித்ரவதை செய்யப்படுவது இல்லை. மாறாக இந்த விளையாட்டுகளில் பங்கேற்கும் மனிதர்களுக்குத்தான் காயங்கள் ஏற்படுகின்றன. இந்த உண்மை தகவல்களை மறைத்து, பீட்டா என்ற அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தடை உத்தரவை பெற்றுள்ளது.

    எனவே ஏறுதழுவுதல், மஞ்சுவிரட்டு, மாடுபிடி திருவிழா நடத்த ஏதுவாக சிறப்பு சட்டத்தை இயற்றும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு இந்த ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    மனுதாரர் தமிழ்நாடு பொதுநல வழக்குகள் மையம் என்ற பெயரில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த அமைப்பின் பெயர், பொதுமக்களுக்கு தவறான ஒரு தகவலை தருவது போல உள்ளது.

    எனவே, இந்த பெயரில் வழக்கு தொடரப்பட்டால், இனி ஏற்றுக்கொள்ளப்படாது. மேலும், ஒரு குறிப்பிட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள், அதுதொடர்பாக பொதுநல வழக்கு தொடரலாம். ஆனால், காலையில் வெளியான பத்திரிகைகளை படித்துவிட்டு, அதில் வரும் செய்தியின் அடிப்படையில் அரை வேக்காடு மனுவை தாக்கல் செய்வதை ஏற்க முடியாது. மேலும், மத்திய, மாநில அரசுகளை ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்காக சிறப்பு சட்டம் இயற்றவேண்டும் என்று இந்த ஐகோர்ட்டு உத்தரவிட முடியாது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    Next Story
    ×