search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ‘தந்தி டி.வி’க்கு தேசிய விருது
    X

    வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ‘தந்தி டி.வி’க்கு தேசிய விருது

    தந்தி டி.வி.க்கு, சிறந்த தொலைக்காட்சிக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில், 25-ம் தேதி நடைபெறும் வாக்காளர் தின விழாவில், ‘இந்த விருதை ஜனாதிபதி தந்தி டி.வி.க்கு வழங்குகிறார்.
    சென்னை:

    வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் மின்னணு ஊடகங்களான டெலிவிஷன் களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து, தேசிய ஊடக விருது வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான தேசிய ஊடக விருது ‘தந்தி டி.வி’க்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது.

    கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மிகச்சிறப்பாக செயல்பட்டதாக மின்னணு ஊடகமாக தந்தி டி.வி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் தினத்தன்று இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில், வரும் 25-ம் தேதி கொண்டாடப்பட உள்ள 7-வது தேசிய வாக்காளர் தினத்தன்று தந்தி டி.விக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. டெல்லியில் நடைபெறும் விழாவில் இந்த ஆண்டுக்கான தேசிய ஊடக விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் இருந்து, தந்தி டி.வி நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பெற்றுக்கொள்கிறார்.

    2016 சட்டமன்ற தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பல்வேறு நிகழ்ச்சியை நடத்தியது தந்தி டி.வி.

    ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்பதையும், வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் தனது ஊடகம் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் தந்தி டி.விக்கு பெரும்பங்கு உண்டு. காரசார அரசியல் செய்திகள், விவாதங்கள் என தொடர்ந்தாலும், வாக்களிக்க வேண்டியதன் அவசியம், ஓட்டுக்கு ஏன் பணம் வாங்க கூடாது, பணம் வாங்குவது வாக்குரிமையை விற்பதற்கு சமம் என்பதை வலியுறுத்தி பல்வேறு செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் வழங்கியது.

    மேலும் ஆயுத எழுத்து, மக்கள் மன்றம் மற்றும் மக்கள் யார் பக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் அரசியல் நிகழ்வுகளை நேரடியாக அரசியல் சார்பின்றி மக்களிடையே கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது. இதுவே மக்களிடம் பெரும் வரவேற்பை பெற உறுதுணையாக இருந்தது. இவற்றையெல்லாம் அலசி ஆராய்ந்த அகில இந்திய தலைமை தேர்தல் ஆணையம், சிறந்த தொலைக்காட்சிக்கான தேசிய விருதை அறிவித்துள்ளது.
    Next Story
    ×