search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் போராட்டம் எதிரொலி - தென் மாவட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து
    X

    ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் போராட்டம் எதிரொலி - தென் மாவட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து

    ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் போராட்டம் நடத்துவதின் எதிரொலியாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிற எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.
    சென்னை:

    ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் போராட்டம் நடத்துவதின் எதிரொலியாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிற எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் என பல தரப்பினரும் தமிழகம் முழுவதும் ஓரணியில் திரண்டு, தன்னெழுச்சி போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் தொடங்கி, மதுரையில் ரெயில் தண்டவாளங்களில் அமர்ந்து ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதன் காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து நேற்று முன்தினம் சென்னைக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அனைத்தும், மதுரைக்கு வராமல் மாற்றுப்பாதையில் (மானாமதுரை வழியாக) திருப்பி விட்டு, இயக்கப்பட்டன. அந்த ரெயில்கள் அனைத்தும் நேற்று 5 மணி முதல் 6 மணி நேரம் தாமதமாக சென்னை எழும்பூரை வந்து அடைந்தன. மேலும் சில ரெயில்கள் பாதி வழியிலும் ரத்து செய்யப்பட்டன.

    இந்த நிலையில், சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நேற்று புறப்பட்டு சென்றிருக்க வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    அவை- சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், ராமேசுவரம் சேது எக்ஸ்பிரஸ், தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ், மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ், ராமேசுவரம் எக்ஸ்பிரஸ், மங்களூரு எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் செந்தூர் எக்ஸ்பிரஸ் ஆகிய 9 ரெயில்கள் ஆகும்.

    இதேபோன்று சென்னை சென்டிரல்-அரக்கோணம், திருச்சி-பாலக்காடு டவுன் பாசஞ்சர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. நேற்று ரத்து செய்யப்பட்ட ரெயில்களில் திருப்பதி-சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ், சென்னை சென்டிரல்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில்களும் அடங்கும்.

    குருவாயூர்-திருச்சூர், திரிச்சூர்-குருவாயூர், திருச்செந்தூர்-பாலக்காடு டவுன், பழனி-பாலக்காடு டவுன், ராமேசுவரம்-மதுரை, செங்கோட்டை-மதுரை, திருச்சி-ராமேசுவரம், திருச்சி-மானாமதுரை ஆகிய இருமார்க்கமாகவும் இயக்கப்படும் பயணிகள் ரெயில்களும் நேற்று ரத்து செய்யப்பட்டன.

    சென்னை சென்டிரல்-பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர்-நெல்லை சிறப்பு கட்டணரெயில், சென்னை சென்டிரல்- ஆலப்புழை, சென்னை சென்டிரல்-எர்ணாகுளம் சிறப்பு கட்டண ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    தென்மாவட்டங்களில் இருந்து சென்னை புறப்பட்டு வந்திருக்க வேண்டிய செங்கோட்டை- பொதிகை எக்ஸ்பிரஸ், மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ், ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரத்தானது.

    தெற்கு ரெயில்வே, இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

    சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில் வழித்தடத்தில் நேற்று காலை ஆங்காங்கே ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் அந்த தடத்தில் மின்சார ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. மதியம் அனைத்து மின்சார ரெயில்களும் வழக்கம்போல இயக்கப்பட்டன. 
    Next Story
    ×