search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பனியன் நிறுவனங்கள் வேலை நிறுத்தம்
    X

    திருப்பூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பனியன் நிறுவனங்கள் வேலை நிறுத்தம்

    திருப்பூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பனியன் கம்பெனிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் ரூ.100 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்தனர்.
    திருப்பூர்:

    ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்ற கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய கோரியும் திருப்பூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், உடுமலை, அவினாசி, மடத்துகுளம், தாராபுரம், காங்கயம் ஆகிய பகுதிகளில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திருப்பூரில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தம் செய்தன.

    திருப்பூரில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனியன் கம்பெனிகள், பின்னலாடை, டையிங் கம்பெனிகள் இன்று அடைக்கப்பட்டு இருந்தன. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வேலை பார்க்கும் 6 லட்சம் தொழிலாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பூரில் பனியன் கம்பெனிகள் மற்றும் கடையடைப்பு காரணமாக சுமார் ரூ.100 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்தனர்.

    திருப்பூரில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. திருப்பூர் பழைய, புதிய பஸ் நிலையம் மற்றும் முக்கிய கடைவீதிகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    இதேபோல் திருப்பூரில் ஆட்டோக்கள், கார், வேன்கள், மற்றும் லாரிகள், தனியார் பஸ்கள் எதுவும் ஓடவில்லை. அரசு பஸ்கள் மட்டும் இயங்கின.

    இதற்கிடையே திருப்பூர் மாவட்டம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. அரசு பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின,

    திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் கல்லூரி மாணவர்கள் இன்று 3-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

    போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பதாகைகளை வைத்து கொண்டு கோ‌ஷமிட்டனர். இதில் ஏராளமான கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டனர். மேலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திருப்பூரில் அரசு பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவர்களுடன் பள்ளி இணைந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோ‌ஷமிட்டனர்.
    Next Story
    ×