search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டு தடையை கண்டித்து திண்டுக்கல்லில் வணிகர்கள் கடை அடைப்பு
    X

    ஜல்லிக்கட்டு தடையை கண்டித்து திண்டுக்கல்லில் வணிகர்கள் கடை அடைப்பு

    ஜல்லிக்கட்டு மீதான தடையை கண்டித்து திண்டுக்கல்லில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

    திண்டுக்கல்:

    ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லிலும் நடந்து வரும் மாணவர்களின் போராட்டம் இன்று 4-வது நாளாக நீடித்து வருகிறது.

    பகல்-இரவு, வெயில்-பனி என எதனையும் பொருட்படுத்தாது மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். வியாபாரிகள், அரசு ஊழியர் சங்கங்கள், லாரி உரிமையாளர் சங்கம், தனியார் பஸ் உரிமையாளர் சங்கம், ஓட்டல் உரிமையாளர் சங்கம், கட்டுமான பொறியாளர் சங்கம் உள்பட பலர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தியும் இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் வணிகர் சங்கங்கள் மற்றும் தொழில் வர்த்தகர் சங்கம் முழு கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

    அதன்படி திண்டுக்கல் நகரில் பெரும்பாலான கடைகள், ஓட்டல்கள், அடைக்கப்பட்டிருந்தன. அதிகாலையில் பஸ்நிலையம், நாகல்நகர், காட்டாஸ்பத்திரி, மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில டீக்கடைகள் மட்டும் திறந்திருந்தன. அதன் பிறகு அவைகளும் அடைக்கப்பட்டன.

    மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். இதனால் தனியார் பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் இயங்க வில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் 273 தனியார் பஸ்களும், 80 மினி பஸ்களும் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் இன்று இயக்கப்படவில்லை.

    திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டில் வியாபாரிகள், கமி‌ஷன் கடைக்காரர்கள், லோடுமேன்கள் ஆகியோர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்கெட் முன்பாக ஜல்லிக்கட்டு காளையை நிற்க வைத்து மத்திய அரசையும், பீட்டாவையும் எதிர்த்து கோ‌ஷங்கள் எழுப்பினர். அதன் பிறகு ஊர்வலமாக வந்து கல்லறை தோட்டம் பகுதியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    போக்குவரத்து தொழிற்சங்கத்தினரும் மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததால் அரசு பஸ்கள் முழுமையாக இயக்கப்படவில்லை. ஒரு சில அரசு பஸ்கள் மட்டுமே இயங்கின அதிலும் குறைந்த அளவு பயணிகளே இருந்தனர்.

    பரபரப்பாக காணப்படும் திண்டுக்கல் மெயின் ரோடு, பஸ்நிலையம், திருச்சி சாலை, பழனிசாலை ஆகியவை வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆங்காங்கே போலீசார் அதிகளவில் நிறுத்தப்பட்டு அசம்பாவிதம் நடை பெறாமல் கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×