search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டு அவசர சட்ட வரைவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பியது உள்துறை
    X

    ஜல்லிக்கட்டு அவசர சட்ட வரைவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பியது உள்துறை

    குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்ட வரைவை உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள்ளது.
    புதுடெல்லி:

    ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், இந்த தடைக்கு மூலகாரணமாக இருந்த பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இரவு பகலாக போராடி வருகிறார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமரிடம் இது தொடர்பாக கோரிக்கை மனு அளித்தார். அப்போது, ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்றவேண்டும் என்று வலியுறுத்தினார்.

    பின்னர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளை விரைவில் காண்பீர்கள் என கூறினார். எனவே, தமிழக அரசின் நடவடிக்கைக்காக போராட்டக்குழுவினர் தொடர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

    இதற்கிடையே டெல்லியில் சுப்ரீம் கோர்ட்டு சட்டநிபுணர்களுடன் ஜல்லிக்கட்டு தொடர்பாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தீவிரமாக ஆலோசனை நடத்தினார். அதேசமயம், ஜல்லிக்கட்டுக்கு சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி கூறியுள்ளார்.

    எனவே, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், குடியரசுத் தலைவர், ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்றும் முதலமைச்சர் உறுதி அளித்தார்.

    இதையடுத்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் இன்று டெல்லியில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வந்தால், அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மேலும், தடை பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

    இதனை ஏற் உள்துறை அமைச்சகம், தமிழக அரசு கொண்டுவரவுள்ள அவசர சட்ட வரைவுக்கு ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து அவசர சட்ட வரைவை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதலுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அனுப்பி வைத்துள்ளார்.

    அவசர சட்ட வரைவுக்கு இன்று அல்லது நாளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த அவசர சட்டத்தின் மூலம் மிருகவதை தடுப்பு சட்டத்தில் தமிழகத்திற்கு விலக்களிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
    Next Story
    ×