search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழி நெடுக மறியல் போராட்டம்: தென்மாவட்ட ரெயில்கள் 5 மணி நேரம் தாமதம்
    X

    வழி நெடுக மறியல் போராட்டம்: தென்மாவட்ட ரெயில்கள் 5 மணி நேரம் தாமதம்

    ஜல்லிக்கட்டு மறியல் போராட்டத்தால் தென் மாவட்ட ரெயில்கள் வழக்கமான நேரத்தை விட 5 மணி நேரம் தாமதமாக எழும்பூர் வந்து சேர்ந்தது.

    சென்னை:

    ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் போராடி வருகிறார்கள். தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.

    போராட்டக்காரர்கள் ரெயில் மறியலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை, மதுரை, சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல இடங்களில் மாணவர்கள் நேற்று ரெயிலை மறித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    மதுரையில் நடந்த மறியல் போராட்டத்தால் தென் மாவட்ட ரெயில்கள் விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக சென்னைக்கு திருப்பி விடப்பட்டது.

    இதனால் நெல்லை, முத்துநகர், கனனியாகுமரி, அனந்தபுரி, திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் தாமதமாக வந்தன. வழக்கமான நேரத்தை விட 5 மணி நேரம் தாமதமாக எழும்பூர் வந்து சேர்ந்தது.

    காலை 7 மணிக்கு வர வேண்டிய நெல்லை எக்ஸ் பிரஸ் 12 மணி வரை வந்து சேரவில்லை. அதனையடுத்து கன்னியாகுமரி, முத்துநகர், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்றும் தாமதமாக வந்து சேர்ந்தன.

    கன்னியாகுமரி எக்ஸ் பிரஸ் திண்டிவனம், மேல்மருவத்தூர் நிலையங்களுக்கு வந்தபோது இளைஞர்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த ரெயில் மிகவும் தாமதமாக எழும்பூர் வந்து சேர்ந்தது.

    இதற்கிடையில் தி.மு.க. வினர் நடத்திய ரெயில் மறியல் போராட்டத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேலும் தாமதமாக வந்தன. பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு நிலையங்களில் நிறுத்தப்பட்டன.

    புதுவையில் இருந்து எழும்பூர் வரக்கூடிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    எழும்பூரில் இருந்து செல்லக்கூடிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் திண்டுக்கல் வரை இயக்கப்பட்டது. திண்டுக்கல் - மதுரை வரை ரத்து செய்யப்பட்டது.

    திண்டுக்கல் - மதுரை பாசஞ்சர் ரெயில் இன்று முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி- திருநெல்வேலி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இன்று காரைக்குடி, மானாமதுரை, விருது நகர் வழியாக இயக்கப்படுகிறது.

    காரைக்கால் - பெங்களூர் பாசஞ்சர் ரெயில், மதுரை- ராமேஸ்வரம் பாசஞ்சர் ரெயில், மதுரை- செங்கோட்டை பாசஞ்சர் ரெயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

    பெங்களூர் - காரைக்கால் பாசஞ்சர் ரெயில் ஓமுலூர் - காரைக்கால் இடையே பகுதி மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×