search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுவையில் முழு அடைப்பு
    X

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுவையில் முழு அடைப்பு

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுவையில் முழு அடைப்பு போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. பந்த் போராட்டத்தினால் புதுவை பஸ்நிலையம் முழுமையாக வெறிச்சோடி கிடந்தது.
    புதுச்சேரி:

    ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரி தமிழகம் மற்றும் புதுவையில் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    போராட்ட களத்திலேயே மாணவர்கள் இரவு, பகலாக தங்கி தங்கள் கோரிக்கைக்கு வலு சேர்த்து வருகின்றனர். மாணவர்கள் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்துள்ளனர்.

    புதுவையில் ரோடியர் மில் திடலில் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்தது. புதுவையில் உள்ள தமிழ் அமைப்புகள், சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த போராளிகள் குழு என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

    இந்த போராளிகள் குழுவின் சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு (பந்த்) போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.

    புதுவையில் நடந்த பந்த் போராட்டத்திற்கு காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் வணிகர்கள் கூட்டமைப்பு, வர்த்தக தொழில் சங்கங்களின் பேரமைப்பு, தனியார் பஸ் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் சங்கம், டெம்போ, ஆட்டோ உரிமையாளர்கள், தொழிலாளர்கள் சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட் வியாபாரிகள் சங்கம், அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு, வன்னியர்கள் சமுதாய வளர்ச்சி இயக்கம், சென்டாக் மாணவர் பெற்றோர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் ஆதரவு அளித்தன.

    புதுவை அரசு சார்பில் புதுவை, காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு பந்த் போராட்டம் தொடங்கியது. பந்த் போராட்டத்தினால் புதுவை பஸ்நிலையம் முழுமையாக வெறிச்சோடி கிடந்தது. தமிழகத்திலிருந்து புதுவை வழியாக செல்லும் அரசு பஸ்களும், புதுவைக்கு வரும் பஸ்களும் வரவில்லை.



    புதுவையில் தனியார் பஸ்களும், அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை. டெம்போக்கள், ஆட்டோக் கள் ஓடவில்லை. நகர பகுதியில் பிரதான சாலைகளான நேரு வீதி, காமராஜர் வீதி, மறைமலை அடிகள் சாலை, திருவள்ளுவர் சாலை, புஸ்சி வீதி, அண்ணாசாலை உள்ளிட்ட வீதிகளில் இருந்த கடைகள் அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.

    நகரையொட்டிய கிராமப்புற பகுதிகளிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. சிறிய டீ கடைகள் கூட திறக்கப்படவில்லை. பெரிய மார்க்கெட், நெல்லித்தோப்பு, சின்ன மணிக்கூண்டு, முத்தியால் பேட்டை, அரியாங்குப்பம் மார்க்கெட்டுகளும் இயங்கவில்லை. உழவர் சந்தையிலும் கடைகள் ஏதும் திறக்கப்படவில்லை.

    இதனால் சாலைகள் வாகனங்கள் ஏதுமின்றி வெறிச்சோடின. தட்டாஞ்சாவடி, கரசூர், சேதராப்பட்டு, மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டைகளில் உள்ள தொழிற்சாலைகளும் இயங்கவில்லை. திரையரங்குகளில் காலை, மதியம் என இரு காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது.

    போராட்டத்தை யொட்டி நகர பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    Next Story
    ×