search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ் பல்கலைக்கழகம் கொண்டு வந்தவர் எம்ஜிஆர்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் புகழாரம்
    X

    தமிழ் பல்கலைக்கழகம் கொண்டு வந்தவர் எம்ஜிஆர்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் புகழாரம்

    தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக்கழகம் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் புகழாரம் சூட்டினார்.
    வேளாங்கண்ணி

    கீழையூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூண்டி கடைத்தெருவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வேதையன் தலைமை தாங்கினார். கீழ்வேளூர் தொகுதி செயலாளர் பால்ராஜ், மாவட்ட இணை செயலாளர் மீனா, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் சதீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி கழக செயலாளர் மீனாட்சிசுந்தரம் வரவேற்றார்.

    இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சராக இருந்து மக்களாட்சியை கொண்டு வந்த எம்.ஜி.ஆர். இலங்கையில் பிறந்தவர் ஆவார். அவரது தந்தை இறந்த பிறகு மிகவும் வறுமையில் வாடிய எம்.ஜி.ஆரின் குடும்பத்தினர் தமிழகம் வந்தனர். பின்னர் நாடக துறையில் நுழைந்து தனது திறமையால் சினிமாவிற்கு வந்தார். பின்னர் மக்களின் செல்வாக்கினால் எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சர் ஆனார்.

    எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது பள்ளி குழந்தைகளுக்கு மதிய சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். மேலும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகளை வழங்கினார். முதன் முதலாக தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக்கழகம் கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். பின்னர் 5-வது உலக தமிழ் மாநாட்டை மதுரையில் நடத்தினார். எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்த போது ஏழை- எளிய மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்தினார். மக்களுக்காகவே கட்சி நடத்துவது அ.தி.மு.க.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் குணசேகரன், ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் சுல்தான்ஆரிபு, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் வரதன், வேளாங்கண்ணி பேரூர் கழக செயலாளர் கிங்ஸ்லிஜெரால்டு, வேளாங்கண்ணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ரவிச்சந்திரன், ஜெயலலிதா பேரவையை சேர்ந்த ராஜ ராஜசோழன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட பிரதிநிதி இப்ராகிம் நன்றி கூறினார்.
    Next Story
    ×