search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெரினாவை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள் கூட்டம்: தமிழகத்தில் வெடித்தது அறவழி புரட்சி
    X

    மெரினாவை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள் கூட்டம்: தமிழகத்தில் வெடித்தது அறவழி புரட்சி

    ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் உச்சக் கட்டத்தை அடைந்து வருகிறது.
    சென்னை:

    ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் உச்சக் கட்டத்தை அடைந்து வருகிறது.

    பொங்கலுக்குள் ஜல்லிக்கட்டு நடைபெற அனுமதி கிடைத்துவிடும் என்று அனைத்து தரப்பு மக்களும் நம்பிக் கொண்டிருந்தனர். அரசியல்வாதிகள் தரப்பிலும் அப்படி ஒரு வாக்குறுதி தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டு வந்தது.

    ஆனால் பொங்கலுக்குள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்காத  நிலையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த தொடங்கினர். அலங்காநல்லூரில் தொடங்கிய இந்த போராட்டம் மாநிலம் முழுவதும் பரவியது.

    குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் சில நூறு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மட்டுமே தொடங்கிய போராட்டமானது பெரிய புரட்சியாக தற்போது உருமாறியுள்ளது.

    பல்வேறு இடங்களில் இருந்து கட்டுக்கடங்காத கூட்டம் மெரினாவை நோக்கி வந்து கொண்டே இருக்கிறார்கள். இளைஞர்கள் மட்டுமல்லாமல் பெண்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் மெரினாவில் குவிந்து வருகின்றனர்.

    நேற்று மாலை நிலவரப்படி மெரினாவில் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கூடி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மதுரை அலங்காநல்லூரிலும் 4-வது நாளாக போராட்டம் வலுவாக நடைபெற்று வருகிறது. அதேபோல் நேற்று இரவு மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டம் தொடங்கியுள்ளது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.

    அதேபோல் நெல்லை வா.உ.சி மைதானத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கோவை, திருச்சி என தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் போராட்டம் தீயாக பரவி வருகிறது.

    இதனால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மட்டுமே முன்னெடுத்த ஜல்லிக்கட்டு போராட்டம் மக்கள் போராட்டமாக வெடிக்கும் சூழல் உருவாகி உள்ளது.

    தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் கடந்த 3 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தை கடந்து இந்தியாவில் புதுடெல்லி, பெங்களூரு ஆகிய நகரங்களிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    தமிழக அரசு சார்பில் முதல்வர் பன்னீர் செல்வம் ஜல்லிக்கட்டு தொடர்பாக இன்று காலை 10.30 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். இதற்காக நேற்று அவர் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

    தமிழக முதல்வர் மற்றும் பிரதமர் மோடி சந்திப்புக்கு பின்னர் வெளியாக செய்தியை பொறுத்தே அடுத்தக்கட்ட முடிவு இருக்கும் என்று போராட்டக் குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

    மாணவர்கள் மற்றும் இளைஞர்களை தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளனர். ஆசிரியர்கள், லாரி உரிமையாளர்கள் என பலரும் இன்று முதல் தங்களது ஆதரவு போராட்டத்தை தொடங்குகின்றனர்.

    இதனால் அரபு நாடுகளில் நடைபெற்ற போராட்டம் போல் தமிழகத்தில் ஒரு புதிய அறவழி புரட்சி போராட்டம் வெடித்துள்ளது.
    Next Story
    ×