search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் 3 ஆயிரம் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை
    X

    சென்னையில் 3 ஆயிரம் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை

    அடுத்த மாதம் முதல் சென்னையில் 3 ஆயிரம் லாரிகள் மூலம் தெருத்தெருவாக குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. 273 தனியார் விவசாய கிணறுகள் வாடகைக்கு எடுத்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.
    சென்னை:

    இந்த ஆண்டு பருவமழை சரிவர பெய்யாததால் தமிழ்நாடு முழுவதும் வறட்சி ஏற்பட்டுள்ளது.

    ஏரி, குளம், அணைகளில் தண்ணீர் வேகமாக வறண்டு விட்டது. இன்னும் 1 மாதத்துக்கு தேவையான தண்ணீர் மட்டுமே உள்ளது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் உள்ளன. இதுதவிர வீராணம் ஏரியில் இருந்தும் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.

    இப்போது பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் 1450 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 9655 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது.

    கடந்த ஆண்டை விட இப்போது 10-ல் ஒரு பங்கு அளவுக்குதான் தண்ணீர் உள்ளதால் அடுத்த மாதம் முதல் சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவும்.

    இதை சமாளிக்க ஆந்திராவில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    இந்த தண்ணீர் போதுமானதாக இல்லை என்பதால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காரணை, சிறுவானூர், புல்லரம்பாக்கம், மூவூர், கீழனூர், மேலானூர், வெள்ளியூர், ராமராஜன், கண்டிகை, மாகரல் ஆகிய கிராமங்களில் உள்ள 273 தனியார் விவசாய கிணறுகளை வாடகைக்கு அமர்த்தி, அதில் இருந்து தண்ணீர் எடுத்து லாரிகளில் சென்னைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் உள்ள குடிசை பகுதி மக்களுக்கும், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்றுவாரிய குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கும் 3 ஆயிரம் லாரி நடைகள் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இதுதவிர மற்ற பகுதி மக்களுக்கும் குடிநீர் கிடைக்க தேவையான முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் 200 மில்லியன் லிட்டர் குடிநீர் தினமும் மக்களுக்கு குறையாமல் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    கோடை காலம் ஆரம்பமாக உள்ளதால் பழுதடைந்த ஆழ்துளை குழாய் கிணறுகளை பழுது நீக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் தண்ணீர் தொட்டிகளும் புதுப்பித்து வைக்கப்பட்டு வருகிறது.
    Next Story
    ×