search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபா நாளை மறுநாள் முக்கிய அறிவிப்பு: தொண்டர்களுக்கு பொங்கல் வாழ்த்து
    X

    தீபா நாளை மறுநாள் முக்கிய அறிவிப்பு: தொண்டர்களுக்கு பொங்கல் வாழ்த்து

    தீபா நாளை மறுநாள் முக்கிய அறிவிப்பை எம்.ஜி.ஆர். பிறந்த நாளான 17-ந்தேதி வெளியிடுகிறார். அன்று முதல் அவரது அரசியல் பயணத்தை தொடங்குகிறார்.

    சென்னை, ஜன.15-

    ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரவேண்டும் என்று அ..தி.மு.க. தொண்டர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக சென்னை தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள தீபாவின் வீட்டு முன்பு தினமும் தொண்டர்கள் குவிந்து அவரை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுக்கிறார்கள்.

    தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தீபாவை பார்க்க வருகிறார்கள். தொண்டர்களின் வருகையில் தீபா மிகுந்த உற்சாகத்தில் உள்ளார்.

    எம்.ஜி.ஆரின் புகழையும், ஜெயலலிதாவின் புகழையும் காப்பாற்றுவேன். அரசியலில் ஈடுபடுவது பற்றி தனது முடிவை விரைவில் அறிவிப்பேன் என்று தீபா தினமும் மாலையில் தொண்டர்கள் மத்தியில் பேசி வருகிறார்.

    தீபாவை பார்க்க வரும் தொண்டர்கள் அவரது வீட்டு வாசலில் வைக்கப்பட்டுள்ள நோட்டில் தங்களது பெயர் விவரம், மற்றும் கருத்துக்கள், ஆலோசனைகளையும் எழுதி வைத்து விட்டு செல்கிறார்கள். அதை தினமும் தீபா படித்து பார்த்து தொண்டர்களின் கருத்தை அறிந்து கொள்கிறார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு அ.தி.மு.க. தொண்டர்கள் தீபாவின் வீட்டு முன்பு குவிந்தபோது தீபா வீட்டில் இல்லை. அப்போது அவரது கணவர் மாதவன் தொண்டர்களை பார்த்தார்.

    பின்னர் அவர் பொது மக்கள் மத்தியில் பேசும் போது, “பொங்கல் பண்டிகை என்பதால் தொண்டர்கள் 2 நாட்கள் வந்து அலைய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

    இந்த நிலையில் நேற்று பொங்கல் பண்டிகையையும் பொருட்படுத்தாமல் தீபா வீட்டில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். எழும்பூர், ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்த அ.திமு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தீபா வீட்டுக்கு வந்தனர்.

    அவர்களை பார்ப்பதற்காக தீபா வீட்டில் இருந்து பால்கனிக்கு வந்தார். அப்போது அவர் ஜெயலலிதாவுக்கு பிடித்த பச்சைநிற சேலை அணிந்திருந்தார். ஜெயலலிதா போலவே தன்னை அலங்கரித்திருந்தார்.

    தீபாவை பார்த்ததும் ஜெயலலிதாவை பார்ப்பது போல இருப்பதாக தொண்டர்கள் தெரிவித்தனர்.

    பின்னர் தொண்டர்கள் தீபாவுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர். அவர்களின் வாழ்த்துக்களை பெற்றுக் கொண்ட தீபா தொண்டர்களுக்கும் தனது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    பின்னர் தொண்டர்கள் மத்தியில் தீபா பேசியதாவது:-

    பல்வேறு சிரமங்களை கடந்து பொங்கல் விழாவையும் பொருட்படுத்தாமல் இங்கு கூடியுள்ளீர்கள். இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஜெயலலிதாவின் கொள்கைகளை கட்டிக் காப்பதற்கான பொறுப்பு எனக்கு உள்ளது. நான் அரசியலில் ஈடுபடுவது தொடர்பான முக்கிய அறிவிப்பை எம்.ஜி.ஆர். பிறந்த நாளான 17-ந்தேதி (நாளை மறுநாள்) வெளியிடுவேன். அன்று முதல் எனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளேன்.

    இவ்வாறு தீபா பேசினார்.

    இந்த நிலையில் திருச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து ஆலோசனை கூட்டங்களையும் நடத்தியுள்ளார். வருகிற 17-ந்தேதி திருச்சி மாவட்ட தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து பிரமாண்ட பேரணி நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக திருச்சி மாநகர் மாவட்ட ஜெ.தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர் லிங்கை சிவக்குமார் கூறுகையில், “தீபா அரசியல் பயணத்தை தமிழகமே எதிர்நோக்கி கொண்டிருக்கிறது. அவரது வருகை நிச்சயம் தமிழகத்தில் பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட ஜெ.தீபா பேரவை சார்பில் கோர்ட்டு அருகிலிருந்து பிரமாண்ட பேரணி தொடங்க உள்ளது. தொடர்ந்து அண்ணா நகர் இணைப்பு சாலை முகப்பில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    தீபா ஆதரவாளர்களின் முதல் பொது நிகழ்ச்சியாக இது நடைபெற இருப்பதால் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான தொண்டர்கள் திரள இருக்கிறார்கள். அதன் மூலம் தீபா பேரவையின் பலத்தை நாங்கள் நிரூபிக்க உள்ளோம்” என்றார்.

    Next Story
    ×