search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீமைக்கருவேல மரங்களை 31-ந் தேதிக்குள் அகற்றாவிட்டால் மாவட்ட நிர்வாகம் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை
    X

    சீமைக்கருவேல மரங்களை 31-ந் தேதிக்குள் அகற்றாவிட்டால் மாவட்ட நிர்வாகம் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை

    சீமைக்கருவேல மரங்களை வருகிற 31-ந் தேதிக்குள் அகற்றாவிட்டால் மாவட்ட நிர்வாகம் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    மதுரை:

    சீமைக்கருவேல மரங்களால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது. கண்மாய் மற்றும் வாய்க்கால்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களால் நீரினை தேக்க முடியவில்லை. எனவே இதனை அகற்ற உத்தரவிட வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி மதுரை முன்னாள் மேயர் பட்டுராஜன் மற்றும் புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்தவர்களும், வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்குகளை ஒருங்கே விசாரித்த ஐகோர்ட்டு சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவு முழுமையாக பின்பற்றப்படாததால், ஐகோர்ட்டில் மீண்டும் பலரும் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள், ஜனவரி 10-ந்தேதிக்குள் (இன்று) ஐகோர்ட்டு எல்லைக்குட்பட்ட 13 மாவட்டங்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை உடனடியாக அகற்றவும் அது குறித்த அறிக்கையை மாவட்ட நிர்வாகங்கள் 10-ந் தேதி தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு இருந்தனர்.

    அதன்படி இன்று நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ தரப்பில் அவரே நேரில் ஆஜரானார். சீமைகருவேல மரங்கள் அகற்றப்பட்டது குறித்து ஒரு சில மாவட்ட நிர்வாகம் மட்டும் அறிக்கைதாக்கல் செய்திருந்தனர்.

    பல மாவட்டங்கள் அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில், கூடுதல் கால அவகாசம் கேட்டு அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது மேலும் 2 வாரங்கள் வழக்கு கேட்டு கொள்ளப்பட்டது.

    இதனை தொடர்ந்து வருகிற 31-ந் தேதிக்குள் 13 மாவட்டங்களிலும் சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும். இதற்கு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் முழுமையாக கருவேல மரங்கள் அகற்றப்பட்ட தகவலை மாவட்ட முதன்மை நீதிபதிகள் ஆய்வு செய்து 31-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த காலத்திற்குள் சீமை கருவேல மரங்களை அகற்றாவிட்டால் மாவட்ட நிர்வாகம் மீது கடுமையான கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் கலையரசன், செல்வம் ஆகியோர் எச்சரிக்கை விடுத்தனர்.

    இந்த வழக்கில் ஆஜராகி விட்டு வந்த வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை மனதார வரவேற்கிறேன்.

    தமிழகத்தின் பாரம்பரிய உரிமையான ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தீவிரமாக வலியுறுத்திவரும் நிலையில் மத்திய அரசு, பொங்கல் விடுமுறையை ரத்து செய்திருப்பது தமிழர்களிடம் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இது இந்திய ஒருமைப்பாட்டை சீர் குலைக்கும் செயல் ஆகும்.

    இதன் காரணமாக தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டால் அதற்கு மத்திய அரசே காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது ம.தி.மு.க. மாவட்ட செய லாளர் புதூர் பூமிநாதன் இளைஞர் அணி மாநில துணை செயலாளர் கீரைத்துறை பாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×