search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3-வது நாள் சோதனை: சேகர்ரெட்டி வீட்டில் 6 மூட்டைகளில் பணக்குவியல்- சுவர் அறைகளில் நகைகள் சிக்கியது
    X

    3-வது நாள் சோதனை: சேகர்ரெட்டி வீட்டில் 6 மூட்டைகளில் பணக்குவியல்- சுவர் அறைகளில் நகைகள் சிக்கியது

    மூன்று நாட்கள் நடத்திய சோதனையில் சேகர்ரெட்டிக்கு சொந்தமான ரூ.166 கோடி ரொக்கம், 181 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

    சென்னை:

    தொழில்அதிபர் சேகர் ரெட்டி வீடுகளில் சிக்கிய பணம் மற்றும் நகைகள் தலையை கிறுகிறுக்க வைக்கும் வகையில் உள்ளது.

    இவ்வளவு பணம், நகைகள் அவர் எப்படி வாங்கிக் குவித்தார் என்று அதிகாரிகளும் பொதுமக்களும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். கருப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கையின் காரணமாகவே சேகர்ரெட்டி சிக்கியுள்ளார்.

    ரூ.500, ரூ.1000 நோட்டுகள் ஒழிக்கும் நடவடிக்கைகளில் இந்தியாவில் அதிகாரிகளில் அதிக தொகையுடன் சிக்கியவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    தொழில்அதிபர் சேகர் ரெட்டியின் பூர்வீகம் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள தொண்டான் துளசி எனும் கிராமம் ஆகும். முதலில் இவர் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரராக இருந்தார். பிறகு சென்னை தி.நகர் பசுல்லா சாலையில் உள்ள வணிக வளாகத்தில் 3-வது தளத்தில் “ஜெ.எஸ்.ஆர். இன்ப்ரா டெக்”, எனும் கட்டுமான நிறுவனத்தை தொடங்கிய பிறகு மிகப்பெரிய கோடீசுவரராக மாறினார்.

    காட்பாடி காந்திநகர் கிழக்கு 10-வது குறுக்குத் தெருவில் “ப” வடிவில் பிரமாண்ட பங்களா கட்டி குடியேறினார். இந்த நிலையில் “எஸ்.ஆர்.எஸ்.மைனிங்” என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளை நடத்தத் தொடங்கிய பிறகு அவர் எட்டிப்பிடிக்க முடியாத பணக்காரராக உயர்ந்தார்.

    ரியல் எஸ்டேட், கட்டு மானம், மணல் குவாரி, நீர் மேலாண்மை, பொதுப்பணித்துறை ஒப்பந்தங்கள், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் என பல்வேறு தொழில்கள் மூலம் சேகர்ரெட்டிக்கு கோடிக்கணக்கில் பணம் குவிந்தது. அந்த பணத்தில் கணிசமான தொகைக்கு தங்க நகைகள் வாங்கினார். கிலோ கணக்கில் நகைகள் சேர்ந்த நிலையில் மீதமுள்ள ரூபாய் நோட்டுகளை கட்டுக் கட்டாக கட்டி பெட்டிகளில் வைத்தார்.

    சென்னை, காட்பாடியில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் நகை, பணத்தை அவர் வைத்திருந்தார். இந்த நிலையில் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் அவர் தன்னிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற திணறினார். வங்கி மேலாளர்கள் மற்றும் பைனான்சியர்கள் மூலம் சுமார் ரூ.40 கோடிக்கு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிவிட்டார்.

    அந்த 40 கோடி ரூபாய் புதிய பணக்கட்டுக்களை தனது வீடுகளில் வைத்திருந்தார். இதுபற்றி யாரோ ஒருவர் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு ஆதாரங்களுடன் தகவல்களை அனுப்பினார். இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களாக தொழில்அதிபர் சேகர் ரெட்டியின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர்.

    கடந்த 8-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 100 பேர் சேகர் ரெட்டியின் சென்னை, காட்பாடி வீடுகள், அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். சேகர்ரெட்டியின் உறவினர் சீனுவாசலுரெட்டி, நண்பர்கள், பிரேம்ரெட்டி, ராகவேந்திரன் ஆகியோரின் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் வருமான வரித்துறை அதிகாரிகள் மயக்கம் போட்டு விழும் அளவுக்கு எடுக்க, எடுக்க பணக்கட்டுகள், நகைகள், ஆவணங்கள் கிடைத்தன.

    கடந்த 3 நாட்களில் சேகர் ரெட்டிக்கு சொந்தமான 5 இடங்களில் சோதனை நடந்தது. சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நடந்த சோதனையில் 50 கிலோ தங்க நகைகள் சிக்கியது. காட்பாடியில் உள்ள இரு வீடுகளில் ஒரு வீடு ‘சீல்’ வைக்கப்பட்ட நிலையில் மற்றொரு வீட்டில் இருந்து 100 கிலோவுக்கும் மேல் நகைகள் கிடைத்தது. நகைகளை பொறுத்தவரை நேற்று மதியம் வரை சேகர்ரெட்டி வீடுகள், அலுவலகங்களில் இருந்து சுமார் 181 கிலோ தங்க நகைகள் அதிகாரிகள் வேட்டையில் கிடைத்தது.

    பணமும் கட்டுக்கட்டாக சிக்கியது. நேற்று மாலை வரை ரூ.166 கோடி ரொக்கப் பணம் கிடைத்தது. இதில் சுமார் ரூ.40 கோடி அளவுக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன.

    வேலூரில் நேற்று காலை அதிகாரிகள் சோதனை நடத்த சென்றபோது சேகர்ரெட்டி வீட்டில் இருந்து 2 கார்கள் தப்பிச் சென்றன. வருமான வரித்துறை அதிகாரிகள் விரட்டியதில் ஒரு கார் மட்டும் சிக்கியது. மற்றொரு கார் தப்பிச் சென்று விட்டது.

    பிடிபட்ட காரில் சோதனையிட்டபோது ரூ.24 கோடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தப்பிச் சென்ற காரில் பல கோடி ரூபாய் கொண்டு செல்லப்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.

    சென்னை, காட்பாடியில் கடந்த 3 நாட்களாக நடந்த சோதனை ஓரளவுக்கு நிறைவு பெற்ற நிலையில் 8-ந்தேதி காட்பாடியில் ‘சீல்’ வைக்கப்பட்ட சேகர் ரெட்டியின் பிரதான வீட்டில் சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். வேலூர்- திருவண்ணாமலை மண்டல வருமான வரித்துறை இயக்குனர் முருகபூபதி தலைமையில் 5 கார்களில் 12 அதிகாரிகள் நேற்று மாலை 5.45 மணிக்கு வந்தனர். அவர்களுடன் பணம், நகைகளை மதிப்பீடு செய்வதற்காக 2 வங்கி அதிகாரிகளும் உடன் வந்திருந்தனர்.

    சேகர்ரெட்டியின் மனைவி ஜெயஸ்ரீயை அதிகாரிகள் சென்னையில் இருந்து காட்பாடிக்கு வரவழைத்திருந்தனர். ஜெயஸ்ரீ முன்னிலையில் ஒவ்வொரு ‘சீல்’ உடைக்கப்பட்டு பணம், நகைகள் எடுக்கப்பட்டன.

    8-ந்தேதி இரவு அந்த வீட்டில் சந்தேகத்துக்குரிய 198 இடங்களில் அதிகாரிகள் சீல் வைத்திருந்தனர். அந்த சீல்கள் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டு விடிய, விடிய அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    நேற்றிரவு 7.20 மணிக்கு தொடங்கிய சோதனை இன்று (ஞாயிறு) அதிகாலை 5 மணி வரை நீடித்தது. மொத்தம் 14 மணி நேரம் வருமான வரித்துறை அதிகாரிகள் காட்பாடி வீட்டில் துருவி, துருவி சோதனையிட்டு நகை, பணம், ஆவணங்களை கைப்பற்றினார்கள்.

    வங்கி அதிகாரிகள் பணத்தை கணக்கிடுவதற்காக ரூபாய் நோட்டு எண்ணும் 2 எந்திரங்கள் கொண்டு சென்றிருந்தனர். குவியல், குவியலாக கண்டுபிடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் உடனுக்குடன் எந்திரங்கள் மூலம் எண்ணப்பட்டன.

    பிறகு அந்த ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக கட்டப்பட்டு டிராவல் ‘பேக்’கு களில் அடைக்கப்பட்டன. அப்படி 6 மூட்டைகள் நிறைய பணம் கட்டுக் கட்டுகளாக அடைக்கப்பட்டது. இதில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளும், புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளும் இருந்தன. இதன் மதிப்பு பல கோடிகள் இருக்கும் என்று தெரிகிறது.

    வருமான வரித்துறை அதிகாரிகளின் நேற்றிரவு சோதனையில் ரூபாய் நோட்டுகளை விட அதிக நகைள் கிடைத்தது. அதிகாரிகளை இது மிகவும் ஆச்சரியப்படுத்தியது. எனவே காட்பாடி வீட்டுக்குள் ரகசியமாக தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்று அவர்களுக்கு சந்தேகம் நிலவியது.

    எனவே சேகர்ரெட்டியின் வீட்டை அவர்கள் அங்குலம், அங்குலமாக ஆய்வு செய்தனர். அவர் குடும்பத்தினரின் படுக்கை அறைகள், கழிவறைகளிலும் தீவிர சோதனை நடந்தது. இதன் மூலம் குவியல், குவியலாக நகைகள் கிடைத்தது.

    நகைகள் கிடைத்த விதம் வருமான வரித்துறையினருக்கு மேலும் சந்தேகத்தை அளித்தது. எனவே சேகர்ரெட்டி வீட்டுக்குள் சுரங்க அறைகள் எங்காவது உள்ளதா என்று ஜெயஸ்ரீயிடம் விசாரித்தனர். அதற்கு பலன் கிடைத்தது.

    வீட்டு சுவரில் பல ரகசிய அறைகள் இருப்பது தெரிந்தது. லாக்கர்கள் போல அந்த சுவர் அறைகள் இருந்தன. அந்த லாக்கர்களில் ஏராளமான நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

    அந்த நகைகள் அனைத்தையும் வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்து கணக்கிட்டனர். பிறகு அவை 2 சூட்கேஸ்களில் அடுக்கப்பட்டன. இதற்கிடையே நிறைய சொத்து ஆவணங்களும் விடிய, விடிய நடந்த சோதனையில் சிக்கின. அந்த சொத்து ஆவணங்கள் மட்டும் 3 பெரிய டிராவல் பேக்குகளில் அடைக்கப்பட்டது.

    இன்று காலை 7.20 மணிக்கு அதிகாரிகள் நடத்திய வேட்டை முடிவுக்கு வந்தது. அதிகாரிகள் பணக்கட்டுகளை 6 மூட்டைகளிலும், நகைகளை 2 சூட்கேஸ்களிலும், ஆவணங்களை 3 டிராவல் ‘பேக்’குகளில் வைத்து வெளியில் எடுத்து வந்தனர். அவைகள் 2 கார்களில் ஏற்றி பலத்த பாதுகாப்புடன் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    நகைகள் கொண்ட சூட்கேசை காரில் ஏற்றும் போது, ஒரு அதிகாரியிடம் நிருபர்கள் ‘‘எவ்வளவு நகைகள் உள்ளது?’’ என்று கேட்டனர். அதற்கு அந்த அதிகாரி 2 விரலை காட்டி சென்றார். எனவே 20 கிலோ நகைகள் அல்லது 200 கிலோ நகைகள் அந்த சூட்கேசில் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    நேற்று மாலை வரை சேகர்ரெட்டிக்கு சொந்தமான ரூ.166 கோடி ரொக்கம், 181 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் விடிய, விடிய நடந்த சோதனையில் சிக்கிய நகைகள், பணத்தையும் கணக்கிட்டால் மொத்தம் ரூ.500 கோடிக்கு மேல் பணம், நகைகள் பிடிபட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது அந்த பணம், நகைகளை கணக்கிட்டு வருகிறார்கள். அவை முடிந்த பிறகுதான் சேகர்ரெட்டி வீட்டில் எவ்வளவு பணம், நகை சிக்கியது என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.

    சேகர்ரெட்டியின் மற்ற அலுவலகங்களில் தொடங்கிய சோதனை இன்னும் முடியவில்லை. மணல் குவாரிகள் தொடர்பான கணக்குகளை சரிபார்க்க இன்னும் சில தினங்கள் தேவைப்படும்.

    எனவே சேகர் ரெட்டியிடம் இருந்து மேலும் பணம், நகைகள் சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணம், நகைகள் மற்றும் சொத்துக்களை முடக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    Next Story
    ×