search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழில் அதிபர் சேகர்ரெட்டி வீட்டில் ரூ.106 கோடி - 127 கிலோ தங்கம் சிக்கியது எப்படி?
    X

    தொழில் அதிபர் சேகர்ரெட்டி வீட்டில் ரூ.106 கோடி - 127 கிலோ தங்கம் சிக்கியது எப்படி?

    தொழில் அதிபர் சேகர்ரெட்டி வீட்டில் சிக்கிய ரூ.106 கோடி, 127 கிலோ தங்கம் ஆகியவற்றுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் முறையாக கணக்கு கேட்டுள்ளனர். இவை முறைகேடாக சம்பாதித்ததா? என்பது பற்றியும் விசாரணை நடந்து வருகிறது.
    சென்னை:

    கருப்பு பண ஒழிப்பில் தீவிரம் காட்டி வரும் மத்திய அரசு கடந்த மாதம் 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்தது.

    இதனை தொடர்ந்து நாடு முழுவதும் பழைய ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருப்பவர்களை பிடிக்க அதிரடி வேட்டைகள் முடுக்கி விடப்பட்டன.

    பெரும் பணக்காரர்கள் பலர், தங்களிடம் உள்ள கணக்கில் வராத கோடிக்கணக்கான 500, 1000 ரூபாய் நோட்டுகளை தங்கமாக மாற்றி விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுபோன்ற ஏமாற்று பேர்வழிகளை கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக வருமான வரித்துறை அதிகாரிகள் ரகசியமாக விசாரணை நடத்தி இந்தியா முழுவதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

    தங்கக்கட்டிகளாக மாற்றப்பட்ட கருப்பு பணம் பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதுபோன்று மாற்றி பதுக்கி வைக்கப்பட்டுள்ள தங்க கட்டிகளை கைப்பற்றவும் வருமானவரி துறையினர் தங்க வேட்டையிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில், தமிழகத்தில் மணல் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் ஆந்திராவை சேர்ந்த பிரபல கனிமவள தனியார் நிறுவனம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும், அந்நிறுவனத்தினர் பல கோடிகளை பதுக்கி வைத்திருப்பதாகவும், வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து அந்நிறுவனத்தின் அதிபரான தொழில் அதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.

    தி.நகர் யோகாம்பாள் சாலையில் தொழில் அதிபர் சேகர் ரெட்டியின் வீடு உள்ளது. அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு குழுவாக சென்று சோதனை நடத்தினர்.




    இவரது சகோதரரான சீனிவாச ரெட்டியின் வீடு தி.நகர் விஜயராகவா சாலையில் உள்ளது. நண்பர் பிரேமின் வீடு முகப்பேரில் உள்ளது. இந்த 2 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

    ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ஆந்திரா கிளப், காட்பாடி காந்தி நகரில் உள்ள சேகர் ரெட்டியின் வீடு, தி.நகரில் உள்ள சேகர் ரெட்டியின் நிறுவனம் உள்ளிட்ட 8 இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 160 பேர் ஈடுபட்டனர். இவர்கள் 8 குழுக்களாக தனித்தனியாக பிரிந்து அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர்.

    நேற்று காலையில் தொடங்கிய இந்த சோதனை இரவு வரையிலும் நீடித்தது. இதில் கணக்கில் வராத பணம் கட்டு கட்டாக சிக்கியது. கிலோ கணக்கில் தங்கமும் பிடிபட்டது.

    மொத்தம் 106 கோடி ரூபாய் பணமும், 127 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது. இதில் 96 கோடி ரூபாய் பழைய ரூபாய் நோட்டுகளாக இருந்தது. மீதம் உள்ள 10 கோடி ரூபாய் புதிய கரன்சி நோட்டுகளாக இருந்தன.

    இந்த 10 கோடி ரூபாயும் புதிய 2 ஆயிரம் நோட்டுகளாகவே இருந்தன. இதனை பார்த்து வருமான வரித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தொழில் அதிபர் சேகர் ரெட்டி மணல் குவாரிகளை முறைகேடாக பயன்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அரசின் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் சிலரை கைக்குள் போட்டுக் கொண்டு செயல்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கடந்த 6 மாதங்களாகவே, சேகர்ரெட்டி குறித்து வருமான வரித்துறையினருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.

    இதனை தொடர்ந்து சேகர் ரெட்டி யார்-யாரிடம் செல்போனில் அதிகமாக பேசுகிறார் என்பது பற்றி வருமான வரித்துறையினர் ரகசியமாக ஆய்வு செய்தனர்.

    சேகர் ரெட்டியின் செல்போன் பேச்சுக்கள் ஒட்டு கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது பல ஆதாரங்கள் சிக்கின. இதன் அடிப்படையிலேயே சேகர்ரெட்டியின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

    106 கோடி ரூபாய் பணம், 127 கிலோ தங்கம் ஆகியவற்றுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் முறையாக கணக்கு கேட்டுள்ளனர். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்த பணமும், நகையும் மணல் குவாரிகளை பயன்படுத்தி முறைகேடாக சம்பாதித்ததா? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது.

    இதற்கு உடந்தையாக அதிகாரிகள் சிலர் செயல்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வருமான வரித்துறை விசாரணையில் அது உண்மை என்பது தெரியவந்தால் அதிகாரிகள் சிக்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

    வருமான வரித்துறையினரின் பிடியில் சிக்கியுள்ள சேகர் ரெட்டியின் சொந்த ஊர் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள தொன்டான் துளசி கிராமம் ஆகும். தற்போது காட்பாடி காந்தி நகரில் பங்களா வீட்டில் வசித்து வருகிறார்.

    ஆரம்ப காலத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த சேகர்ரெட்டி படிப்படியாக வளர்ந்து மிகப் பெரிய தொழில் அதிபராகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    வருமான வரித்துறை அதிகாரிகள் அவ்வப்போது தங்களுக்கு கிடைக்கும் தகவலின் பேரில் தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் சோதனை நடத்துவது வழக்கம். இப்படி நடத்தப்பட்ட சோதனையில், இவ்வளவு பணமும், நகையும் இதுவரை சிக்கியதில்லை. இது வருமான வரித்துறை அதிகாரிகளின் மிகப்பெரிய வேட்டையாகும்.

    Next Story
    ×