search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையை அச்சுறுத்தும் புயல்: பலத்த மழை பெய்ய வாய்ப்பு
    X

    சென்னையை அச்சுறுத்தும் புயல்: பலத்த மழை பெய்ய வாய்ப்பு

    புதிதாக உருவாகும் புயல், சென்னையை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதுடன், மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
    சென்னை:

    புதிதாக உருவாகும் புயல், சென்னையை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதுடன், மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நேற்று வரை பொய்த்து போன நிலையில் உள்ளது. ‘நாடா’ புயலும் ஏமாற்றிவிட்டது.

    இருப்பினும், வரும் நாட்களில் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் உள்ளனர். இந்த நிலையில் வங்க கடல் பகுதியில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 2 நாளில் புயலாக மாறுகிறது.

    இதற்கு ‘வார்தா’ புயல் என்று பெயரிடப்படும். இந்த புயல், முதலில் நாளை (வெள்ளிக்கிழமை) அந்தமான்-நிகோபார் தீவுகளைத்தான் தாக்கும்.

    அங்கு மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். மொத்தம் 25 செ.மீ. மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும். நிலச்சரிவு, மின்சார துண்டிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்களும் உருவாக வாய்ப்புள்ளது.

    அந்தமான்-நிகோபார் தீவுகளை தாக்கிய பிறகு, இந்த புயல், சென்னையும், ஆந்திர கடலோர பகுதியும் அமைந்துள்ள கிழக்கு இந்தியா நோக்கி நகருகிறது. 11-ந் தேதி வாக்கில் (ஞாயிற்றுக்கிழமை) ‘வார்தா’ புயல், சென்னைக்கும், ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்.

    100 கி.மீ. தொலைவு வரை உள்ள இடங்களிலும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இந்த பலத்த காற்று காரணமாக, மின் கம்பங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படக்கூடும்.

    ‘வார்தா’ புயலால், சென்னையில் 11-ந் தேதியும், 12-ந் தேதியும் மிக பலத்த மழை பெய்யும் என்று தெரிகிறது. சென்னை மட்டுமின்றி, ஆந்திர மாநிலத்தின் நெல்லூர், ஓங்கோல், காக்கிநாடா, விசாகப்பட்டினம் ஆகிய ஊர்களிலும் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிபுணர் ஆடம் டவுட்டி தெரிவித்தார்.

    ‘புயல் செல்லும் பாதையில் நிச்சயமற்ற தன்மை காணப்பட்டபோதிலும், சென்னை முதல் ஆந்திர மாநிலத்தின் பிரம்மபூர் வரை உள்ள மக்கள் நிலைமையை கண்காணித்து வர வேண்டும்’ என்று அவர் கூறினார்.

    இந்த புயல் காரணமாக, விசாகப்பட்டினம், மசூலிப்பட்டினம் உள்ளிட்ட துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், காக்கிநாடா உள்ளிட்ட துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, இந்த புயல் குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. அது விசாகப்பட்டினத்தில் இருந்து தென் கிழக்கில் 1,180 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருக்கிறது. அந்த மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று அதற்கடுத்த 24 மணி நேரத்தில் (நாளை காலை 8.30 மணிக்குள்) புயலாக மாறுகிறது.

    இதன் விளைவாக, அடுத்த 24 மணி நேரத்தில், அந்தமான்-நிகோபார் தீவுகளின் சில இடங்களில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யக்கூடும். அந்தமான் தீவு மற்றும் வடக்கு ஆந்திராவை ஒட்டிய கடல் பகுதிகளில், கடல் கொந்தளிப்பாக காணப்படும். எனவே, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.

    அந்த புயல், தமிழ்நாட்டை நோக்கி வருகிறதா? என்பதையும், அது நகரும் பாதையையும் கண்காணிக்கிறோம்.

    மேலும் தென் தமிழக கடலோர பகுதிகளில் காற்று மண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (வியாழக்கிழமை) சில இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

    புயல் உருவாகி வருவதை மீனவர்களுக்கு அறிவிக்கும் வகையில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

    எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் நேற்று முன்தினம் இரவு 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடையும்போது கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

    தூத்துக்குடியில், புயல் எச்சரிக்கை காரணமாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 250 விசைப்படகுகள் உள்ளன. இந்த படகுகள் மூலம் தினமும் மீனவர்கள் கடலுக்குச் சென்று சுமார் ரூ.2 கோடி அளவுக்கு மீன்களை பிடித்துக்கொண்டு கரைக்கு திரும்புவர். இந்த மீன்கள் தூத்துக்குடி மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

    கேரளா மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் இங்கு வந்து குவிந்து மீன்களை வாங்கிச் செல்வர். இதனால் தூத்துக்குடி மீன் மார்க்கெட் தினமும் காலை முதல் மாலை வரை நெரிசலாக காணப்படும்.

    இந்த நிலையில் கடந்த வாரம் நாடா புயல் காரணமாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி துறைமுகத்திலும் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது. அப்போது மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தபோதிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் மழை பெய்யவில்லை.

    ஆனாலும் கடலில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்தது. மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்தனர். மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் 3 நாட்களில் மீனவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் பலகோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்பட்டது.

    புயல் கரையை கடந்ததை தொடர்ந்து, கடந்த 3, 5-ந் தேதிகளில் மீண்டும் மீனவர்கள் கடலுக்கு சென்று வந்தனர். மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து இருந்தது. அய்யப்பன் கோவில் சீசன் தொடங்கி உள்ளதை தொடர்ந்து வியாபாரிகள் வருகை குறைவாகவே இருந்தது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்ததையொட்டியும், தற்போது புதிய புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாலும் நேற்று முன்தினம் முதல் மீண்டும் விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தப்பட்டன. மீன்பிடி துறைமுகத்தில் அனைத்து விசைப்படகுகளும் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளன.

    3 நாட்கள் துக்கம் அனுசரிக்கும் வகையில் இன்றும் (வியாழக்கிழமை) படகுகள் கடலுக்கு செல்லாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், தூத்துக்குடி மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது. 
    Next Story
    ×