search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எழும்பூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணம் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் நின்ற கூட்டம்
    X
    எழும்பூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணம் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் நின்ற கூட்டம்

    2 நாட்கள் விடுமுறைக்குப்பின் திறப்பு: வங்கிகளில் மீண்டும் மக்கள் கூட்டம்

    2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று வங்கிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதனால் வங்கிகள் முன்பு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    சென்னை:

    கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் 8-ந்தேதி அறிவித்தது.

    பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்ற மக்களுக்கு அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. வருகிற 30-ந்தேதி வரை மட்டுமே வங்கியில் கொடுத்து பணத்தை மாற்ற முடியும்.

    புதிய ரூபாய் நோட்டுகள் தேவைகளை அச்சடித்து வினியோகிக்காததால் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.

    வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களும் முழுமையாக இயங்காமல் இருப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ரிசர்வ் வங்கியில் இருந்து வங்கிகளுக்கு போதுமான அளவு பணம் சப்ளை செய்ய இயலவில்லை.

    பணத்தட்டுப்பாட்டால் வங்கிகள் திணறி வருகின்றன. வாடிக்கையாளர்களுக்கு ரூ.2000, ரூ.4000, ரூ.6000 என்ற அளவில் வழங்கி வருகின்றனர்.

    பணத்தட்டுப்பாட்டை சமாளிக்க முடியாமல் வங்கிகள் மூடப்பட்டும் கிடக்கின்றன.

    இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று வங்கிகள் மீண்டும் திறக்கப்பட்டன. சனிக்கிழமை அன்று பல வங்கிகளில் பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இன்று வங்கிகள் திறப்பதால் முன்பே மக்கள் கூடி விட்டனர். காலையிலும் வங்கிகளுக்கு பணம் வராததால் வாடிக்கையாளர்களுக்கு டோக்கன் கொடுத்து அமர வைத்தனர். ஒருசில வங்கிகளில் பணம் இல்லை என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது.

    2 நாட்களுக்கு ஒருமுறை தான் வங்கிகளுக்கு பணம் வினியோகிக்கப்படுவதால் பொதுமக்களை சந்திப்பதில் வங்கி ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.

    ஏ.டி.எம். மையங்களும் பெருமளவில் இன்னும் மூடியே கிடக்கின்றன. பணத்தட்டுப்பாடு, பணப்புழக்கம் பிரச்சனை ஏற்பட்டு ஒருமாதம் ஆகியும் இன்னும் தீரவில்லை.

    ஒவ்வொரு வங்கிகளின் பணம் இருப்பு மையத்தில் இருந்து பணத்தை வினியோகிப்பதற்கு பிற்பகல் ஆகிவிடுகிறது. மாலை 4 மணிக்கு பிறகு பொது மக்களுக்கு பணம் வழங்க வேண்டிய நிலை உருவாகிறது. இதனால் காலையில் இருந்து மாலை வரை மக்கள் வங்கிகளில் காத்து கிடக்கின்ற பரிதாப நிலை ஏற்பட்டு உள்ளது.

    புதிய ரூ.500 நோட்டு முழுமையாக ஏ.டி.எம். மையங்களிலும், வங்கிகளிலும் வினியோகிக்கப்பட்டால்தான் சில்லரை தட்டுப்பாடும் நீங்கும்.

    இதுகுறித்து வங்கி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    எங்கள் கிளைக்கு இன்று ரூ.20 லட்சம் பணம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.10 லட்சம் ரூ.500 புதிய நோட்டுகளாகும். இதனை மக்களுக்கு பிரித்து கொடுக்கிறோம். டோக்கன் வழங்கப்பட்டு காத்து இருந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.

    பணத்தட்டுப்பாடு இன்னும் நீங்கவில்லை. இதனால் வாடிக்கையாளர்களை கையாள்வது சிரமமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×