search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எழுத்தாளர் சோ மரணம்: முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்
    X

    எழுத்தாளர் சோ மரணம்: முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்

    பன்முகத்தன்மை கொண்டவரும் சிறந்த எழுத்தாளருமான சோ மறைவிற்கு முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இரங்கலை தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    துக்ளக் பத்திரிக்கை நிறுவன ஆசிரியரும், புகழ் பெற்ற அரசியல் விமர்சகருமான சோ ராமசாமி உடல்நலக் குறைவினால் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

    பத்திரிக்கை ஆசிரியர், திரைப்பட கதையாசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வழக்கறிஞர் என்ற பன்முக திறன் கொண்ட சோ ராமசாமி, திரைப்பட கதையாசிரியராகவும், திரைப்பட இயக்குநராகவும், 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பெருமைக்குரியவர்.

    சோ ராமசாமி அரசியல் சார்ந்த நகைச்சுவை பாத்திரங்களில் நடித்து திரைப்படத் துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். சோ ராமசாமியின் அரசியல் நையாண்டித்தனம் கொண்ட ‘‘முகமது பின் துக்ளக்’’ நாடகம் மற்றும் திரைப்படம் இதற்கு சிறந்த சான்றாகும்.

    புரட்சித் தலைவி அம்மா மீது அளவற்ற அன்பும் பாசமும் கொண்டிருந்தவர் சோ ராமசாமி. புரட்சித் தலைவி அம்மாவின் 60-வது பிறந்த தினத்தின் போது சோ ராமசாமியின் வீட்டிற்கே சென்று புரட்சித் தலைவி அம்மா ஆசி பெற்றார்.

    மேலும் 2011-ஆம் ஆண்டு புரட்சித் தலைவி அம்மா ஆட்சிப் பொறுப்பேற்ற போது சோ ராமசாமியின் இல்லம் சென்று அவரது நல்வாழ்த்துகளை பெற்றார்.

    சோ ராமசாமி மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் பணியாற்றியுள்ளார். சோ ராமசாமி தனது பத்திரிக்கை பணிக்காக வீரகேசரி விருது, கோயங்கா விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.

    சோ ராமசாமியின் மறைவு பத்திரிக்கை துறைக்கு மட்டுமின்றி திரைப்படம் மற்றும் நாடகத் துறைக்கும் பேரிழப்பாகும்.

    சோ ராமசாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

    Next Story
    ×