search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டீக்கடை நடத்தி முதல்வர் பதவிக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம்
    X

    டீக்கடை நடத்தி முதல்வர் பதவிக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம்

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் டீக்கடை நடத்தி வந்த ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா மறைவையடுத்து 3-வது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
    தேனி:

    தமிழகத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரிய குளத்தைச் சேர்ந்தவர். பள்ளிப்படிப்புக்கு பிறகு மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் பி.யூ.சி. படிப்பையும், பி.ஏ. பட்டப் படிப்பை உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரியிலும் முடித்தார்.

    அதன் பிறகு பெரிய குளத்தில் டீக்கடை நடத்தி வந்தார். எம்.ஜி.ஆர். மீது இருந்த பற்று காரணமாக அக்கட்சியில் உறுப்பினர் ஆனார். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. 2 அணியாக உடைந்தது. 1989-ம் ஆண்டு ஜானகி அணியில் பெரியகுளம் நகர செயலாளராக இருந்தார். அதன் பிறகு ஒன்றுபட்ட அ.தி.மு.க.வில் அதே ஆண்டு பெரியகுளம் நகர செயலாளராக நியமிக்கப்பட்டார்.

    அதனைத் தொடர்ந்து பெரியகுளம் கூட்டுறவு நகர வங்கியில் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டார். மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர், மாவட்ட செயலாளர் பதவிகளில் இருந்தார். 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை பெரியகுளம் நகராட்சி தலைவராக பதவி வகித்தார்.

    2001-ம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை வருவாய்த்துறை அமைச்சராக இருந்தார். டான்சி வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்ற போது 2001-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந் தேதி முதல் 2002-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி வரை முதல் அமைச்சராக இருந்தார்.

    ஜெயலலிதா தண்டனையில் இருந்து விடுபட்டு 2002-ம் ஆண்டு மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார்.

    மார்ச் 2-ந் தேதி முதல் 2006-ம் ஆண்டு டிசம்பர் வரை பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்தார். அதன் பின் 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் தி.மு.க. ஆட்சியை பிடித்தது. 2011-ம் ஆண்டு வரை எதிர்கட்சி துணைத் தலைவராக இருந்தார். 2011-ம் ஆண்டு போடி தொகுதியில் வெற்றி பெற்று நிதி அமைச்சரானார்.

    2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றார். இதனால் செப்டம்பர் 29-ம் தேதி முதல் 22.5.2015 வரை 2-வது முறையாக முதல்வர் பதவியில் இருந்தார். ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்து கர்நாடக நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார். ஓ.பன்னீர்செல்வம் நிதி அமைச்சராக தொடர்ந்து இருந்து வந்தார்.

    தற்போது ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்பலோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பிறகு கடந்த அக்டோபர் மாதம் 11-ந் தேதி முதல் முதல்வர் வகித்து வந்த இலாக்காக்களை ஓ.பன்னீர்செல்வம் கூடுதலாக கவனித்து வந்தார்.

    ஜெயலலிதா மறைவையடுத்து 3-வது முறையாக ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.
    Next Story
    ×