search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் கடைகள் அடைப்பு: பால் பாக்கெட்டுகள் கிடைக்காமல் மக்கள் அவதி
    X

    சென்னையில் கடைகள் அடைப்பு: பால் பாக்கெட்டுகள் கிடைக்காமல் மக்கள் அவதி

    முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து தவறான தகவல் வெளியானதை தொடர்ந்து கடைகள் மூடப்பட்டன. பால் பாக்கெட்டுகள் கூட கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.x
    சென்னை:

    தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து இன்று மாலை தவறான தகவல் வெளியானதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பதட்டமான சூழல் ஏற்பட்டது.

    செய்தி வெளியான சில நொடிகளிலேயே தமிழகம் முழுவதும், கடைகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டது. மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் என அனைத்தும் மூடப்பட்டது.

    குறிப்பாக சென்னையில் உடனடியாக அனைத்து கடைகளும் மூடப்பட்டதோடு, வாகனங்களில் சென்று கொண்டிருந்த மக்களும் உடனடியாக வீடுகளுக்கு திரும்பினர். பெரும்பாலான அரசு பேருந்துகள் உடனடியாக போக்குவரத்து பணிமனைக்கு திருப்பி விடப்பட்டன.

    பதட்டமான சூழல் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டது. இதனால், சென்னையே வெறிச்சோடி காணப்பட்டது. இரவு 8 மணிக்கு சென்னையில் மயான அமைதி நிலவியது.

    நேற்று இரவு முதலமைச்சருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானதால் இன்று காலையில் பால் சப்ளை வழக்கத்தைவிட குறைவாகவே இருந்தது. மாலையில் வெளியான தகவல் மேலும் பீதியை கிளப்பியதால் கடைகள் மூடப்பட்டன.

    எனவே, அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். குறிப்பாக பால் பாக்கெட்டுகள், காய்கறிகள் கிடைக்கவில்லை. திறந்திருந்த ஒருசில கடைகளிலும் அதிக விலைக்கு பால் பாக்கெட்டுகளை விற்றதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    பெட்ரோல் பங்குகளும் உடனடியாக மூடப்பட்டதால், மக்கள் அவதிக்குள்ளாயினர். ஹோட்டல்கள் மூடப்பட்டதால், இரவு உணவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

    இருப்பினும் சென்னையில் ஆட்டோக்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது. ரயில் சேவை பாதிப்பில்லாமல் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

    Next Story
    ×