search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கண்ணீர் விடும் பெண்.
    X
    கண்ணீர் விடும் பெண்.

    ஜெயலலிதா உடல் நிலை பாதிப்பு: அதிர்ச்சியில் தமிழக மக்கள்

    ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றிய தகவலால் நேற்று மாலையில் இருந்தே தமிழகம் முழுவதும் பரபரப்பு நிலவியது. அவரது உடல் நிலை பற்றிய தகவலை கேள்விப்பட்டதும் தமிழக மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
    சென்னை:

    உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை சீரடைந்து வந்த நிலையில் நேற்று மாலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

    இதுபற்றிய தகவல் பரவியதும் அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர். நேற்று பிற்பகலில் இருந்தே அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டனர்.

    இரவில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள் ஆஸ்பத்திரி முன்பு குவிந்திருந்தனர். நேரம் செல்ல செல்ல அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் அலை அலையாக ஆஸ்பத்திரியை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். இருப்பினும் கட்டுக்கடங்காமல் குவிந்திருந்த தொண்டர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

    ஆஸ்பத்திரி முன்பு திரண்டிருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் தங்களை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பெண் தொண்டர்கள் பலர் ஜெயலலிதா குணம் அடைவதற்காக விரதம் இருந்து மாலை அணிந்திருந்தனர். அவர்களும் தங்களது இஷ்ட தெய்வங்களை வேண்டிய படியே மனமுருகி பிரார்த்தனை செய்தனர்.



    முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மீது அதீத பந்தபாசம் கொண்டிருந்த தொண்டர்கள் பலர் நீண்ட நேரமாக கண்களை மூடிக்கொண்டு கடவுளை வேண்டிக் கொண்டே இருந்தனர். ஆஸ்பத்திரி முன்பு திரண்டிருந்த அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் சிலர் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்தனர்.

    அவர்கள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மனபலம் படைத்தவர். தொண்டர்களின் பிரார்த்தனையால் நிச்சயமாக அவர் பூரண குணம் அடைந்து திரும்புவார் என்று கூறிக்கொண்டே இருந்தனர். இருப்பினும் ஜெயலலிதாவின் உடல் நிலையை எண்ணி அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் கவலை தோய்ந்த முகத்துடனேயே காணப்பட்டனர்.

    தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வந்திருந்த அ.தி.மு.க. தொண்டர்கள் விடிய விடிய ஆஸ்பத்திரி அருகிலேயே காத்துக்கிடந்தனர்.

    தங்களது பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து பிரசாதங்களையும் அ.தி.மு.க.வினர் எடுத்து வந்திருந்தனர். பலர் ஆஸ்பத்திரி வாசல் அருகிலேயே வைத்து தாங்கள் கொண்டு வந்திருந்த பிரசாதங்களை, விபூதி, குங்குமம் போன்றவற்றை நெற்றியில் பூசிக்கொண்டனர்.

    எங்கள் அம்மா பூரண குணம் அடைந்து விரைவில் வீடு திரும்புவார் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றிய தகவலால் நேற்று மாலையில் இருந்தே தமிழகம் முழுவதும் பரபரப்பு நிலவியது. அவரது உடல் நிலை பற்றிய தகவலை கேள்விப்பட்டதும் தமிழக மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். எங்கு பார்த்தாலும் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய பேச்சாகவே இருந்தது.



    தொலைக்காட்சிகளிலும் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய செய்திகள் விடிய விடிய ஒளிபரப்பாகி கொண்டே இருந்தன. அதனை பார்த்தபடியே வெளியூர்களில் இருக்கும் தங்களது உறவினர்களை தொடர்பு கொண்டு ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி விசாரித்துக் கொண்டே இருந்தனர்.

    இதனால் மாநிலம் முழுவதும் பதட்டமான சூழலே நேற்று இரவு நிலவியது. இன்று காலையிலும் அது நீடிக்கிறது.

    இதற்கிடையே ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் இன்று வருகை தருகிறார்கள். அவர்கள் அளிக்கும் சிகிச்சைக்கு பின்னர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும் என்று அ.தி.மு.க.வினரும் தமிழக மக்களும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.
    Next Story
    ×