search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுமக்களின் குறைகளை தீர்க்க போலீசாரின் வாட்ஸ்-அப் குழுக்கள்
    X

    பொதுமக்களின் குறைகளை தீர்க்க போலீசாரின் வாட்ஸ்-அப் குழுக்கள்

    அனைத்து காவல் நிலையத்திலும் பொதுமக்களின் குறைகளை தீர்க்க போலீசாரின் ‘வாட்ஸ்அப்’ குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளது. தங்களது பிரச்சினை உடனுக்குடன் தீர்ந்தவுடன் அதற்காக பாராட்டுக்களையும் பதிவு செய்கிறார்கள்.
    செல்போனில் வாட்ஸ்-அப் வசதி வந்த பின்னர் பல வழிகளில் அது உதவியாக இருக்கிறது. அதனை சென்னை போலீசாரும் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டனர். இதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொதுமக்கள்-போலீசார் இணைந்த வாட்ஸ்-அப் குழுக்களை உருவாக்க போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.

    இதனைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள், போலீசார் மற்றும் பொதுமக்கள் அடங்கிய வாட்ஸ்-அப் குழுக்கள் தொடங்கப்பட்டன.

    தென் சென்னை கூடுதல் கமி‌ஷனர் சங்கர், வடசென்னை கூடுதல் கமி‌ஷனர் ஸ்ரீதர் ஆகியோரது மேற்பார்வையில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் இந்த வாட்ஸ்-அப் குழுக்கள் செயல்பட்டு வருகிறது.

    போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் இந்த குழுவை தொடங்கி உள்ளனர். அதில், அந்த பகுதி துணை கமி‌ஷனர், உதவி கமி‌ஷனர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

    சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர்கள் தொடங்கி இருக்கும் இந்த குழுவில், குற்றப்பிரிவு, மற்றும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களும் இடம் பெற்றுள்ளனர். பொதுமக்கள் அதிக அளவில் வாட்ஸ்-அப் குழுக்களில் உள்ளனர்.

    கே.கே.நகர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி பொது மக்களை ஒன்றிணைத்து சட்டம்- ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வாட்ஸ்-அப் குழுவை தொடங்கி உள்ளார். இது தொடர்பான விழிப்புணர்வு கூட்டமும், இணையதள கண்காணிப்பு கேமராக்கள் தொடக்க விழாவும் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.

    தென் சென்னை இணை கமி‌ஷனர் அன்பு இதனை தொடங்கிவைத்தார். இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், தேவராஜ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். வாடகைக்கு குடியிருப்பவர்களின் விவரங்கள் தொடர்பான விண்ணப்பம் மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை இணை கமி‌ஷனர் அன்பு, பொது மக்களுக்கு வழங்கினார்.

    கே.கே. நகரில் உருவாக்கப்பட்ட இந்த வாட்ஸ்-அப் குழுவை இன்ஸ்பெக்டர் பாஸ்கர் நிர்வகித்து வருகிறார். தி.நகர் துணை கமி‌ஷனர் சரவணனும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளார். மோட்டார் சைக்கிளில் வலம் வரும் ரோந்து அதிகாரிகள் 9 பேரும் (பீட் ஆபீசர்ஸ்) குழுவில் உள்ளனர். போலீஸ் தரப்பில் மொத்தம் 23 பேர் இருக்கிறார்கள். பொதுமக்கள் 100 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    கே.கே.நகர் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக யாராவது நடமாடினாலோ, வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தாலோ அதுபற்றி பொதுமக்கள் உடனடியாக வாட்ஸ்- அப்பில் போட்டோக்களுடன் தகவல் அனுப்புகிறார்கள். அது போன்ற இடங்களுக்கு உடனடியாக போலீசார் விரைந்து சென்று நடவடிக்கை மேற்கொள்கிறார்கள். சாலை, குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட புகார்களுக்கு வாட்ஸ்-அப் குழுக்கள் மூலமாக பொதுமக்கள் போலீசாரை நாடுகிறார்கள்.

    இதற்கு தீர்வு காணவும் போலீசார் நடவடிக்கை எடுக்கிறார்கள். தங்களது பிரச்சினை பற்றி வாட்ஸ்-அப்பில் புகார் செய்யும் பொதுமக்கள் பிரச்சினை தீர்ந்தவுடன் அதற்காக பாராட்டுக்களையும் பதிவு செய்கிறார்கள்.
    Next Story
    ×