search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணாசாலையில் 7-வது மாடியில் இருந்து குதித்து கம்ப்யூட்டர் என்ஜினீயர் தற்கொலை
    X

    அண்ணாசாலையில் 7-வது மாடியில் இருந்து குதித்து கம்ப்யூட்டர் என்ஜினீயர் தற்கொலை

    அண்ணாசாலையில் 7-வது மாடியில் இருந்து குதித்து கம்ப்யூட்டர் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சென்னை:

    செங்குன்றம் தீர்த்தங்கரைபட்டு பகுதியை சேர்ந்தவர் ராமதுரை (24). சாப்ட்வேர் என்ஜினீயர். அண்ணா சாலையில் ஸ்பென்சர் பிளாசா அருகே 7 மாடிகளை கொண்ட சக்தி டவர் வளாகத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு வேலையில் இருந்த ராமதுரை 7-வது மாடிக்கு சென்று திடீரென கீழே குதித்தார். இதில் உடல் சிதறி பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தார்.

    இதுபற்றி ஆயிரம்விளக்கு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராமதுரையை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ராமதுரையின் உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர். அங்கு ராமதுரைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆனால் இன்று அதிகாலை 4 மணிக்கு ராமதுரை சிகிச்சை பலனின்றி பலியானார். இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது ராமதுரை காதல் தோல்வியால் மாடியில் இருந்து குதித்து இருப்பது தெரியவந்தது. இளம்பெண் ஒருவர் நீண்ட நாட்களாக ராமதுரையை காதலித்து வந்தார். ஆனால் அந்த காதல் கைகூடாமல் போனதாக தெரிகிறது. இதன் காரணமாகவே அவர் தற்கொலை முடிவு எடுத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே ராமதுரையின் சாவில் மர்மம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மாடியில் இருந்து விழுந்த அவர் படிக்கட்டு அருகில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்ததாகவும் தெரிகிறது. இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆவடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.சி.ஏ. முடித்த ராமதுரை கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். நன்றாக படித்த அவர் முதல் மாணவராகவே தேர்ச்சி பெற்றுள்ளார்.

    நேற்று வீட்டில் இருந்த அவர் திங்கட்கிழமைதான் வேலைக்கு செல்ல வேண்டும் என்று வீட்டில் இருந்தவர்களிடம் கூறி இருக்கிறார். ஆனால் திடீரென வேலைக்கு புறப்பட்டார். இதுபற்றி கேட்டபோது திடீரென நிறுவனத்தில் வரச்சொல்லி விட்டார்கள் என்று கூறியுள்ளார்.

    ராமதுரையின் மரணம் அதிர்ச்சி ஏற்படுத்துவதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். யாரிடமும் அதிகம் பேசாத ராமதுரை இந்த முடிவை எப்படி எடுத்தான் என்பது தெரியவில்லை என அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×