search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை - திருவாரூர் வங்கிகள் முன்பு பணம் எடுக்க காத்திருந்த 2 பேர் பலி
    X

    தஞ்சை - திருவாரூர் வங்கிகள் முன்பு பணம் எடுக்க காத்திருந்த 2 பேர் பலி

    தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் வங்கிகளுக்கு பணம் எடுக்க சென்ற 2 விவசாயிகள் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    தஞ்சை:

    500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என கடந்த மாதம் 8-ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது.

    வங்கிகளில் ஒரு நாளைக்கு ரூ. 2 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. ஏ.டி.எம்.களில் சென்று பணம் எடுக்கலாம் என்றால் அங்கும் ரூ. 2 ஆயிரத்திற்கு மேல் எடுக்க முடியவில்லை.

    தற்போது அரசு ஊழியர்களுக்கு வங்கியில் சம்பளம் போடப்பட்டு உள்ளதால் அவர்களும் வங்கிக்கு படை எடுத்த வண்ணம் உள்ளனர். இதேபோல் தனியார் ஊழியர்கள் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் என அனைவரும் தங்களுக்கு தேவையான பணத்தை எடுக்க வங்கிகளுக்கு சென்று வருகிறார்கள்.

    வட மாநிலங்களில் வங்கிகளில் பணம் எடுக்க நின்றபோது மயங்கி விழுந்தும் மாரடைப்பு ஏற்பட்டும் 40 பேர் பலியானார்கள்.

    தற்போது தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் வங்கிகளில் பணம் எடுக்க சென்ற விவசாயிகள் 2 பேர் மயங்கி விழுந்து இறந்தனர்.

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் பாளையக்கோட்டை ஊராட்சி புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் அசோகன் (வயது 55) விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 6 ஏக்கர் விளை நிலத்தில் பயிர் செய்திருந்தார். அதற்கு உரமிடுவதற்கு திருமக்கோட்டையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று நகையை அடகு வைத்தார். பணம் பெற நீண்ட நேரம் வரிசையில் நின்றார்.

    அப்போது அசோகன் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் நின்றவர்கள் அவரை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

    அசோகனுக்கு வேதவள்ளி என்ற மனைவியும், கலைவாணன், பிரவீன் ஆகிய 2 மகன்களும், தீபா என்ற மகளும் உள்ளனர்.

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள வாழ்க்கை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 70) விவசாயி. இவர் பாபநாசம் கீழவீதியில் செயல்படும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு பணம் எடுக்க சென்று வரிசையில் நின்றார். அவரது மனைவி தையல் நாயகியும் சென்று இருந்தார்.

    சுப்பிரமணியன் வங்கியில் பணம் எடுக்கும் படிவத்தில் கையெழுத்திட்டபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை தாங்கி பிடித்து தையல் நாயகி தனது மடியில் கிடத்தினார்.

    இதனை கண்ட அவரது மனைவி கதறி அழுதார். ஆனாலும் அங்கு நின்றிருந்தவர்கள் தையல் நாயகிக்கு எந்த உதவியும் செய்யவில்லை. அவர்கள் பணம் எடுப்பதிலேயே குறியாக இருந்தனர்.

    அங்கு பணம் எடுக்க வந்த பெண் போலீஸ் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து பரிசோதித்தபோது சுப்பிரமணியன் இறந்துவிட்டது தெரியவந்தது.

    டெல்டா மாவட்டத்தில் வங்கிகளுக்கு பணம் எடுக்க சென்ற 2 விவசாயிகள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேற்கு வங்காளத்தில் ஹுக்ளி மாவட்டத்தில் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க நின்ற அரசு ஊழியர் சுருண்டு விழுந்து பலியானார். அவர் பெயர் கல்லோல்ராய். பண்டல் என்ற இடத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வரிசையில் பல மணிநேரம் காத்திருந்தார். அப்போது அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்த அவர் பாங்கி முன்பு பிணமானார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இறந்த கல்லோல் ராய் குடும்பத்துக்கு அனுதாபம் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக வடக்கு மற்றும் தெற்கு பர்கானா மாவட்டங்களில் 2 பேர் இதே போல் வங்கியில் பணம் எடுக்க காத்திருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தனர்.
    Next Story
    ×