search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சில்லறைக்காக புதிய ரூ.2000 நோட்டை கிழிக்கும் கும்பல்
    X

    சில்லறைக்காக புதிய ரூ.2000 நோட்டை கிழிக்கும் கும்பல்

    சில்லறைக்காக புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை ஒரு சிலர் கிழித்து ரிசர்வ் வங்கியில் சென்று மாற்றுவது தெரியவந்ததையடுத்து, அவர்களுக்கு சில்லறை வழங்கப்படமாட்டாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் சில்லறை தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளது. புதிய ரூ.2000 நோட்டுகள் மட்டுமே தற்போது அதிகளவு மக்களிடம் புழக்கத்தில் உள்ளது.

    புதிய ரூ.500 நோட்டு புழக்கத்திற்கு வந்தால் சில்லறை தட்டுப்பாடு நீங்கும் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் புதிய ரூ.500 நோட்டு ஒரு சில பகுதிகளில் மட்டுமே வினியோகிக்கப்பட்டன.

    இதனால் ரூ. 2000 நோட்டை மாற்ற முடியாமல் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ரெயில் முன்பதிவு கவுண்டர், ஓட்டல்கள், மளிகை கடை, சூப்பர் மார்க்கெட்டுகளில் கூட மாற்ற முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.

    குறைந்த மதிப்பிலான ரூ100, ரூ.50, ரூ. 20 நோட்டுகள் போதுமான அளவு புழக்கத்தில் இல்லாதாலும புதிய ரூ2000 நோட்டிற்கும் குறைந்த மதிப்பிலான ரூ.100 நோட்டிற்கும் இடையில் அதிக வித்தியாசம் ஏற்பட்டதால் சில்லறை தட்டுப்பாடு இதுவரை தீரவில்லை.

    வங்கிகளிலும். ஏ.டி.எம்.களிலும் ரூ.2000 நோட்டுகள் மட்டும் தான் அதிகளவு வழங்கப்படுகின்றன. இதனால் சாமான்ய மக்கள் கடைகளில் சில்லறை மாற்றவதற்கு கஷ்டப்படுகின்றனர்.

    புதிய ரூ.2000 நோட்டை வாங்கவே மறுக்கிறார்கள். வியாபாரிகளும், நிறுவனங்களும் கூட இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

    புதிய ரூ2000 நோட்டிற்கு சில்லறை கிடைக்காத சிலர் நூதன முறையில் சிந்தித்தனர். சேதம் அடைந்த ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் கொடுத்தால் மாற்றிக் கொள்ள முடியும்.

    ஆனால் புதிய ரூ.2000 நோட்டை முழுமையாக கொடுத்தால் மாற்றிதரமாட்டார்கள் என கருதி அதனை 2,3 பகுதிகளாக கிழித்தனர். கிழிந்த பகுதிகளை ஒட்டி ரிசர்வ் வங்கியில் கொடுத்தால் ரூ.500, ரூ100, ரூ20 சில்லறை நோட்டுகள் கிடைக்கும் என்று நம்பினார்கள்.

    குழந்தை கிழித்துவிட்டது. பர்சில் வைத்த போது ‘ஜிப்’ கிழித்து விட்டது என்று பல காரணங்களை கூறி கிழிக்கப்பட்ட புதிய ரூ.2000 நோட்டிற்கு பதிலாக மாற்ற நோட்டுகள் (ரூ.100, ரூ50) என கொடுத்தனர்.

    ஆனால் புதிய ரூபாய் நோட்டுகள் கிழிந்து அதிக அளவு ரிசர்வ் வங்கிக்கு வந்ததால் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    சில்லறை பெறுவதற்காகவே ரூ.2000 நோட்டை வேண்டும் என்றே கிழித்து கொண்டு தினமும் 10-க்கும் மேற்பட்டவர்கள் வந்ததால் இதனை வேறுவிதமாக வங்கி அதிகாரிகள் கையாண்டனர்.

    புதிய ரூ.2000 நோட்டு கிழிந்து இருப்பதாக கூறி மாற்ற வருபவர்களிடம் அதற்கான தொகைக்கு சில்லறை நோட்டு உடனே திருப்பி தரமாட்டாது. 2 வாரம் ஆகும் என்று கூறி திருப்பி விட்டனர்.

    மேலும் ரிசர்வ் வங்கியில் சேதம் அடைந்த நோட்டுகளுக்கு அதன் சேதத்தின் அடிப்படையில் பணம் குறைத்து வழங்கப்படும்.

    50 சதவீதத்திற்கும் மேலாக கிழிந்து இருந்தால், சேதம் அடைந்து இருந்தால் ( 3 துண்டுகளாக) அதற்கு பாதி பண மதிப்பு கணக்கிட்டு தரப்படும் என்று ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    சில்லறைக்காக புதிய ரூ2000 நோட்டை கிழிக்கும் செயல் வேதனைக்குரியது. இதனை ஊக்குவிக்க கூடாது என்பதற்காக தற்போது புதிய ரூபாய் நோட்டிற்கு மாற்றம் செய்து தருவதில்லை என்று அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×