search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரிக்கு கூடுதலாக தண்ணீரை திறந்து விடுங்கள்: ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கடிதம்
    X

    பூண்டி ஏரிக்கு கூடுதலாக தண்ணீரை திறந்து விடுங்கள்: ஆந்திர அரசுக்கு தமிழக அரசு கடிதம்

    விவசாயிகள் தண்ணீரை எடுப்பதால் பூண்டி ஏரிக்கு கூடுதலாக தண்ணீரை திறந்து விடுங்கள் என ஆந்திர மாநில அரசுக்கு தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஒரு கடிதம் எழுதி உள்ளனர்.

    ஊத்துக்கோட்டை:

    வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யாததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வேகமாக வறண்டு வருகின்றன.

    கடந்த வருடம் இதே நாளில் ஏரிகள் நிரம்பி வழிந்த நிலையில் இப்போது 4-ல் 1 பங்கு தண்ணீர் கூட ஏரிகளில் இல்லை. இதனால் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் தமிழக அரசு எடுத்த முயற்சியின் காரணமாக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் கிருஷ்ணா கால்வாய் மூலம் பூண்டி ஏரிக்கு கடந்த 9-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த தண்ணீர் கடந்த 16-ந்தேதி இரவு பூண்டி ஏரிக்கு வரத் தொடங்கியது. கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 1500 கனஅடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் பூண்டி ஏரிக்கு வெறும் 63 கனஅடி மட்டுமே வந்து சேர்ந்தது. அதன் பிறகு தண்ணீர் படிபடியாக குறைந்தது.

    18-ந்தேதி 20 கனஅடி தண்ணீர்தான் பூண்டி ஏரிக்கு வந்தது. 19-ந்தேதி வெறும் 5 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்தது. இப்போது சுத்தமாக தண்ணீர் நின்று விட்டது.

    கண்டலேறு அணையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை 1700 கனஅடி வீதம் கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டும் பூண்டி ஏரிக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை.

    கால்வாயில் வரும் அவ்வளவு தண்ணீரையும் ஆந்திர மாநில விவசாயிகள் வழி நெடுக எடுப்பதால் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்தனர்.

    கிருஷ்ணா கால்வாயில் சுமார் 900 மதகுகள் உள்ளன. வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் அங்குள்ள விவசாயிகள் நமக்கு வரும் குடிநீரை திருடி வயலுக்கு பாய்ச்சுகின்றனர்.

    தண்ணீர் திருட்டை தடுக்க செல்லும் அதிகாரிகளை விவசாயிகள் மிரட்டுகிறார்கள். இதனால் அதிகாரிகள் பயந்து நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.

    இதனால் ஆந்திர மாநில அரசுக்கு தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஒரு கடிதம் எழுதி உள்ளனர்.

    அதில் கிருஷ்ணா கால்வாயில் வரும் தண்ணீரை விவசாயிகள் திருடி எடுப்பதை தடுத்து நிறுத்த வேண் டும் என்றும், தற்போது கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை அதிகரித்து கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    பூண்டி ஏரியில் தண்ணீர் இல்லாததால் ஏரிக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் கிருஷ்ணா கால்வாயில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

    பூண்டி ஏரியின் கொள்ளளவு 3231 மில்லியன் கனஅடியாகும். தற்போது ஏரியில் 83 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது. புழல் ஏரியின் கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடியாகும். இங்கு 156 மில்லியன் கன அடி தண்ணீர்தான் இருப்பு உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் 317 மில்லியன் கனஅடியும் (கொள்ளளவு 3645), சோழவரம் ஏரியில் 73 மில்லியன் கனஅடியும் (கொள்ளளவு 881) தண்ணீர் உள்ளது.

    Next Story
    ×