search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்: கோயம்பேடு பஸ் நிலையத்தில் 80 கேமராக்கள் கண்காணிப்பு
    X

    சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்: கோயம்பேடு பஸ் நிலையத்தில் 80 கேமராக்கள் கண்காணிப்பு

    பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கோயம்பேடு பஸ் நிலையத்தில் 80 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அங்கு சிறப்பு கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தீபாவளிக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது.

    கடந்த ஆண்டு இந்த பஸ்கள் அனைத்தும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்தே புறப்பட்டு சென்றன. இதனால் தீபாவளி நேரத்தில் சென்னையில் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளிக்கு முந்தைய நாள் சென்னை மாநகரமே நெரிசலில் திணறியது.

    இதனை தவிர்ப்பதற்காக இந்த ஆண்டு தமிழக அரசின் போக்குவரத்து துறை அதிகாரிகள் பஸ்கள் இயக்கப்படும் இடங்களை தனித்தனியாக பிரித்து அறிவித்தனர். இதன்படி நேற்று முன்தினம் முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    இன்று 4 ஆயிரம் பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்படுகிறது. நாளை தீபாவளி பண்டிகை என்பதால் இன்று காலையில் இருந்தே சிறப்பு பஸ்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் சாரை சாரையாக படையெடுத்தனர். இதனால் கோயம்பேடு பஸ் நிலையத்தில் காலையிலேயே கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    நேரம் செல்ல செல்ல வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது. பிற்பகலில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் கூட்டம் அலை மோதியது.



    இதே போல மற்ற 4 சிறப்பு பஸ் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சென்னை மாநகர போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் 4 சிறப்பு பஸ் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களை தடுப்பதற்காக குற்றப் பிரிவு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் 80 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அங்கு சிறப்பு கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

    அண்ணாநகர் துணை கமி‌ஷனர் பெரோஸ்கான் மேற்பார்வையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    தீபாவளி பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பஸ் நிலைய வளாகத்தில் பழுதாகி இருந்த கேமராக்கள், மெட்டல் டிடெக்டர் கருவிகளும் சரி செய்யப்பட்டன. பயணிகளின் உடைமைகளும் பலத்த சோதனைக்குட்படுத்தப்பட்டன.

    பஸ் நிலையத்தினுள் பிக்பாக்கெட், செயின் பறிப்பு போன்ற சம்வங்களை தடுக்க சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பஸ் நிலையத்தில் பயணிகளின் கூட்டத்தை கருத்தில் கொண்டு தேவையான அளவுக்கு பஸ்கள் மட்டுமே பஸ் நிலையத்தினுள் அனுமதிக்கப்பட்டன.

    இதனால் பஸ் நிலையத்தை சுற்றி அரசு பஸ்கள் அணி வகுத்து நிற்பதை பார்க்க முடியவில்லை. போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைந்தது.

    சட்டம்-ஒழுங்கு போலீசாருடன் இணைந்து போக்குவரத்து போலீசாரும் பணியாற்றி வருகிறார்கள். பஸ் நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் சாலையோரமாக நிறுத்தப்படும் வாகனங்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்துவதாலும் நெரிசல் குறைந்து போக்குவரத்து சீராக நடைபெற்று வருகிறது.

    இன்று இரவு கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீசாரை ஈடுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×